ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்துரைக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வியடம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதிகாரிகள் யாரேனும் கடமைகளை செய்யாவிட்;டால் நாடாளுமன்றுக்கு அவர்கள் அறிவித்திருக்க வேண்டும்.
இதன் பின்னணியில் அரசியல் காரணம் தான் உள்ளது.
2015 இல் இல்லாது போன அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற ராஜபக்ஷக்கள் முயற்சித்தார்கள்.
மீண்டும் புலிகள் வரப்போவதாகக் கூறினார்கள். ஆனால், 2017 இற்கு பின்னர் அந்தக் கதை அப்படியே மறைந்து விட்டது.
இதன் பின்னர், முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்தார்கள். சிங்கள மக்களுக்காக கருகலைப்பு கொத்து வழங்கப்பட்டதாகக் கூறினார்கள்.
கருக்கலைப்புச் செய்யும் ஆடை உள்ளதாகக் கூறினார்கள். எங்கே இப்போது இவைகள் எல்லாம்?
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக மாறிவிடுவார்கள் என்றும்கூட பிரசாரம் செய்தார்கள்.
சனல் 4 ஆவணப்படம் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
இதுதொடர்பாக கேட்டால் ராஜபக்ஷக்களுடன் சனல் 4 விற்கு கோபம் உள்ளதாகக் கூறுகிறார்கள்.
நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையும் தானே செய்தி வெளியிட்டது. அப்படியென்றால் இந்தப் பத்திரிகையும் இவர்களுடன் பகையில் தானா உள்ளது?
நிரூபமா ராஜபக்ஷ தொடர்பாக பண்டோரா ஆவணங்கள் வெளியிடப்பட்டன. இந்த ஆவணத்தை வெளியிட்ட சர்வதேச நிபுணர்களும் ராஜபக்ஷவினருடன் கோபத்திலா உள்ளார்கள்?
எனவே சனல் 4, ராஜபக்ஷக்களுடன் பகை எனக்கூறுவது, உண்மையை மறைக்க எடுக்கப்படும் நடவடிக்கையாகவே கருதப்படுகிறது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.