கனடாவில் வசிக்கும் ஒரு நண்பர் சொன்னார்..கனடாவுக்கு விசிட் விசாவில் வருபவர்களுக்கு படிவங்களை நிரப்பி கொடுப்பதற்கு என்று கிட்டத்தட்ட 30 மையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன என்று.அம்மையங்களில் ஒரு படிவத்தை நிரப்புவதற்கு ஆயிரம் கனேடியன் டாலர்கள் அறவிடப்படுகின்றன என்றும் அவர் சொன்னார்.கிட்டத்தட்ட இலங்கை ரூபாயில் இரண்டரை லட்சம். கனடாவில் இருக்கும் தமிழர்கள் தாயகத்தில் உள்ள தமது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களை அவ்வாறு அழைக்கலாம் என்று ஒரு கதை பலமாக உலாவுகிறது. அதனால் நெருங்கிய உறவினர்கள் மட்டுமல்ல, நண்பர்கள் தெரிந்தவர்கள் போன்றவர்களும் கனடாவில் இருப்பவர்களை அனுகி தமக்கு விசா பெற்றுத் தருமாறு கேட்கின்றார்கள்.
இது சம்பந்தமாக அண்மையில் அரசியல் விமர்சகர் யதீந்திரா ஒரு கட்டுரையும் எழுதியிருக்கிறார்.
கனடாவை நோக்கி மட்டுமல்ல லண்டனை நோக்கியும் ஏனைய ஐரோப்பிய நாடுகளை நோக்கியும் ஒரு புலப்பெயர்ச்சி அலை எழுந்திருக்கின்றது. தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை என்று இதனை அழைக்கலாமா? ஏனெனில் ஜூலை 83 க்கு முன்பு ஒரு புலப்பெயர்ச்சி இருந்தது. அது ஒரு அலை அல்ல.தமிழ் மக்கள் மத்தியில் இருந்து படித்தவர்கள், பணக்காரர்கள்,ஐரோப்பிய அமெரிக்க கண்டங்களை நோக்கிப் போனார்கள். ஒரு சிறிய தொகையினர் ஆசிரியர்களாக ஆப்பிரிக்கக் கண்டத்துக்குப் போனார்கள்.அதுபோலவே இன்னொரு தொகுதியினர் மேற்காசிய நாடுகளுக்குப் போனார்கள். அவ்வாறு மேற்காசிய நாடுகளுக்கு போனவர்களில் ஒரு பகுதியினர் அங்கே தங்களை நிதி ரீதியாகப் பலப்படுத்திக் கொண்ட பின் தமக்கு கிடைத்த தொடர்புகளைப் பயன்படுத்தி ஐரோப்பா, அமெரிக்க போன்ற கண்டங்களுக்குப் போனார்கள். இது முதலாம் கட்டப் புலப்பெயர்ச்சி.
இரண்டாவதாக 83 ஜூலைக்குப் பின் ஒரு புலப்பெயர்ச்சி அலை எழுந்தது. உண்மையாகவே இதைத்தான் அலை என்று வர்ணிக்கலாம். படித்தவர், படிக்காதவர், பணக்காரர், ஏழை என்ற வேறுபாடு இன்றி ஈழத் தமிழர்கள் தொகையாக குறிப்பாக சட்டவிரோத வழிகளின் ஊடாக ஐரோப்பிய அமெரிக்கக் கண்டங்களை நோக்கிப் புலம் பெயரத் தொடங்கினார்கள். இந்த புலப்பெயர்ச்சி அலையின் விளைவாக ஒரு பலமான தமிழ் புலம்பெயர்ந்த சமூகம் உலகம் முழுவதும் உருவாகியது. இது ஏறக்குறைய மொத்த தமிழ் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதி என்று உத்தியோகப் பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கனடாவில் வசிக்கும் கவிஞர் சேரன் கூறுவார் அந்த எண்ணிக்கை சற்று மிகைப்படுத்தப்பட்டது என்று.நான்கு தமிழர்களின் ஒருவர் புலம்பெயர்ந்து விட்டார் என்பதுதான் திருத்தமாக இருக்கும் என்று.
எதுவாயினும், தாய் நாட்டுக்கு வெளியே ஈழத் தமிழர்கள் அதிகரித்த அளவில் வசிக்கும் ஒரு நாடாக கனடா மாறிவிட்டது. அங்கே மூன்றரை லட்சத்திலிருந்து 5 லட்சம் வரையிலுமான ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்வதாக கணிப்பிடப்படுகிறது. இந்த எண்ணிக்கை கனடாவில் வசிக்கும் சீக்கியர்களின் எண்ணிக்கைக்கு அடுத்தபடியானது என்றும் ஒர் கணிப்பீடு உண்டு.
இது இரண்டாவது புலப்பெயர்ச்சி அலை.மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியோடுயோடு தொடங்கியது.முதலில் அது தென்னிலங்கையில்தான் தொடங்கியது. சிங்கள இளையோர் மத்தியில்தான் தொடங்கியது. அங்கெல்லாம் சிங்கள இளையோர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு முன் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகின. முதலில் சிங்கள மக்கள் மத்தியில் தோன்றிய அந்த அலை பின்னர் தமிழ் மக்களுக்கும் பரவியது. அதன் விளைவாக தமிழ் மக்கள் மத்தியிலிருந்து வயது வேறுபாடு இன்றி பெரும் தொகையினர் புலம்பெயர்வதற்கு தயாராகி வருகிறார்கள்.
இளையவர்கள் மட்டுமல்ல, வயதானவர்களும் அவ்வாறு போகலாமா என்று சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள். 15 வளர்ந்த பிள்ளைகள் படிக்கும் ஒரு வகுப்பில் எத்தனை பேர் வெளிநாட்டுக்கு போகத் தயார் என்று கேட்டால் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் கையை உயர்த்தும் ஒரு நிலைமை தோன்றி விட்டது. பாடசாலைக் கல்வியை முடித்தவர்கள் மட்டுமல்ல, முடிக்காதவர்களும் வெளியேறத் துடிக்கிறார்கள். சாதாரண வேலைகளில் இருப்பவர்கள் மட்டுமல்ல,உயர் பதவிகளில் இருப்பவர்களும் புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சிலமாதங்களுக்கு முன் வவுனியாவில் உள்ள உப பாஸ்போர்ட் அலுவலகத்தில் டோக்கனை பெறுவதற்காக இரவிலிருந்து வரிசையில் காத்திருக்கும் ஒரு போக்கு அதிகரித்தது.அவ்வாறு வரிசையில் நின்று டோக்கனைப் பெற்றுக் கொடுப்பது அங்கு ஒரு தொழிலாக மாறிவிட்டது.ஒருவர் 5000 ரூபாய் வரை கூலியைப் பெற்றார்.
அதுமட்டுமல்ல,ஆங்கில மொழி பேசும் நாடுகளை நோக்கி புலம்பெயர முற்படுகிறவர்கள் அதற்குரிய பரீட்சைகளை எழுத வேண்டியிருக்கிறது. அதனால் இப்பொழுது தமிழ்ப் பகுதிகளில் ஐஈஎல்ரி எஸ் என்று அழைக்கப்படும் ஆங்கில மொழித் திறன் காண் பரீட்சைக்கு ஆட்களைத் தயார்படுத்தும் நிறுவனங்களின் தொகையும் ஆசிரியர்களின் தொகையும் அதிகரித்து வருகின்றன.அவ்வாறான பயிற்சிகளுக்கு பெருந்தொகைப் பணம் அறவிடப்படுகிறது. கனடாவுக்கு விசிட் விசாவில் போகலாம், லண்டனுக்கு கடைகளில் வேலை செய்வதற்கான அனுமதியை பெற்றுக் கொண்டு போகலாம் என்று நம்பி ஆங்கிலம் படிப்பவர்களின் தொகை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக லண்டனில் சொந்தமாகத் தொழில் நடத்துபவர்கள் தமது தொழில் நிலையங்களுக்கு ஆட்கள் தேவை என்று கூறி குறிப்பிட்ட தொகையினரை லண்டனுக்கு அழைப்பதற்கான அனுமதியைப் பெறலாம் என்ற ஒரு நிலை தோன்றி விட்டது. இதனால் கல்வித் தேவைகளுக்காகவன்றி தொழிற் தேவைகளுக்காகவும் பரீட்சைகளை எழுதிவிட்டு லண்டனுக்குப் போகத் தயாராகுபவர்களின் தொகை அதிகரித்து வருகிறது.
குறிப்பிட்ட ஒரு வயதுக்காரர்களை சந்திக்கும் பொழுது பெரும்பாலானவர்கள் எந்த நாட்டுக்கு போகலாம்? எப்படிப் போகலாம்? அதற்கு என்னென்ன ஏற்பாடுகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்? என்று கதைப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது என்று கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் சொன்னார். அவர் யுத்தத்தின் இறுதி கட்டம் வரையிலும் வன்னி கிழக்கில் வசித்தவர். அவர் மேலும் சொன்னார்…யுத்தத்தின் இறுதி நாட்களில் அந்த மூன்று கிராமங்களுக்குள் வசித்தவர்கள் எந்த வழியால் தப்பிச் செல்லலாம் என்று தங்களுக்கிடையே கதைத்துக் கொள்வார்கள். கடலை ஏக்கத்தோடு பார்ப்பார்கள்.ஏறக்குறைய அப்படி ஒரு நிலைமைதான் இப்பொழுது தோன்றியுள்ளதா? என்று.அவர் அப்படிக் கேட்கும் அளவுக்கு புலம்பெயர வேண்டும் என்ற தாகம் ஒரு குறிப்பிட்ட வயதினர் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதற்கு என்ன காரணம்?
பொருளாதார நெருக்கடி மட்டும் காரணமா? அல்லது கனடா போன்ற நாடுகள் தமது குடி வரவு விதிகளில் தளர்வுகளை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுவது ஒரு காரணமா? அல்லது புலம் பெயர்ந்து ஏற்கனவே மேற்கத்திய நாடுகளில் மிகப் பலமாக தங்களை ஸ்தாபித்துக் கொண்ட தமிழர்கள், இப்பொழுது மற்றவர்களுக்கு விசா எடுத்துக் கொடுக்கும் தகைமையை அடைந்திருப்பதன் விளைவா இது?
இவ்வாறு பெருந்தொகையாக தமிழர்கள் புலம் பெயர்வார்களாக இருந்தால் ஓர் அரசியல் சமூகமாக தமிழ் மக்கள் மேலும் திரையக்கூடிய ஆபத்து உண்டு. ஏற்கனவே போர், புலப்பெயர்ச்சி போன்றவற்றால் மெலிந்து கொண்டு போகும் சனத்தொகையானது, பிள்ளைப் பேறு விகிதம் குறைந்து வருவதனால் மேலும் மெலிகிறது. தவிர புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மணமக்களை நோக்கிச் செல்லும் வம்சவிருத்தி செய்யக்கூடிய இளம் தலைமுறையின் வெளியேற்றத்தால் அது ஏற்கனவே மெலிந்து வருகிறது.இப்பொழுது மூன்றாவது புலப்பெயர்ச்சி அலையின் விளைவாக அது மேலும் மெலியக்கூடிய ஆபத்துத் தெரிகிறது.
அண்மையில் திருகோணமலையைச் சேர்ந்த ஒரு நண்பர் கூறினார்…ஒரு பாடசாலையில் பாலர் வகுப்பில் படிப்பிக்கும் ஓர் ஆசிரியை சொன்னாராம்… தனது வகுப்பில் இருந்து கடந்த வாரத்தில் மட்டும் ஆறு பிள்ளைகள் வெளிநாடு சென்று விட்டதாக. அதாவது குடும்பமாகப் புலம் பெயர்கிறார்கள் என்று பொருள். இதனால் திருகோணமலையில் வாடகைக்கு வீடுகளை எடுப்பது ஒப்பீட்டளவில் இலகுவானதாகிவிட்டது என்றும், தமிழர்கள் பெறுமதியான தங்களது வீடுகளையும் சொத்துக்களையும் விற்றுவிட்டு புலம்பெயர்ந்து வருவதாகவும் அவர் சொன்னார்.இவ்வாறு தமிழர்கள் தொடர்ச்சியாகப் புலம்பெயர்ந்தால் ஓர் அரசியல் சமூகமாக இலங்கைத் தீவில் அவர்கள் மேலும் பலவீனமடைய நேரிடும்.
சனத்தொகை என்பது ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசமாக வனையும் அடிப்படை அம்சங்களில் ஒன்று. ஒரு மக்கள் கூட்டத்தை ஐந்து அடிப்படை அம்சங்கள் ஒரு தேசமாகக் கூட்டிக்கட்டுகின்றன. சனம் அல்லது இனம்; நிலம் அல்லது தாயகம்; பொது மொழி,;பொதுப் பொருளாதாரப் போன்றனவே அந்த ஐந்து அம்சங்களும் ஆகும்.
திட்டமிட்ட குடியேற்றங்கள் போர் போன்றவற்றின் காரணமாக கிழக்கில் திருகோணமலை அம்பாறை ஆகிய மாவட்டங்களில் நிலம் பெருமளவுக்கு பறிபோய் விட்டது. இப்பொழுது மட்டக்களப்பிலும் நிலத்தை அபகரிக்கும் வேலைகள் முழுமூச்சாக நடக்கின்றன. வடக்கிலுந் தான்.
இவ்வாறு ஏற்கனவே நிலம் சிறுத்தை கொண்டுவரும் ஒரு பின்னணியில், சனத்தொகையும் சிறுத்துக்கொண்டே போனால் என்ன நடக்கும்? தமிழ் மக்கள் ஓர் அரசியல் சமூகமாக தங்களுக்குரிய அரசியல் இலக்குகளை முன்வைத்துப் போராடும் வலிமையை இழந்து விடுவார்கள் அல்லவா? இது தொடர்பாக தமிழ்த்தேசியப் பரப்பிலுள்ள அரசியல்வாதிகள்,கட்சிகள், செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்கள் இப்பொழுதே குரல் கொடுக்க தொடங்க வேண்டும். இல்லையென்றால் ஆளற்ற வீடுகளின் மத்தியில் விகாரகள் கட்டப்படுவதை எதிர்ப்பதற்கு யார் இருக்கப்போகிறார்கள்?