யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில், இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள காணிகளை உரிமையாளர்கள் வேலி அடைத்து அறிக்கைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 33 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட மாங்கொல்லை பகுதியில் இருந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் வெளியேறி உள்ளனர். ஆனாலும் குறித்த பகுதி இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவில்லை.
அதனால் அக்காணி உரிமையாளர்கள் அப்பகுதியில் குடியமர முடியாத நிலை காணப்படுகிறது. அந்நிலையில் அப்பகுதிக்குள் ஊடுருவும் இரும்பு திருடர்கள் வீடுகளில் உள்ள இரும்புகளை திருடி சென்றனர்.
அது குறித்து தெல்லிப்பழை பிரதேச செயலர் , காங்கேசன்துறை பொலிஸார் உள்ளிட்ட தரப்பினருக்கு பல தடவைகள் வீட்டு உரிமையாளர்கள் முறைப்பாடு செய்தும் திருட்டினை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் , இரும்பு திருடர்கள் சுதந்திரமாக அப்பகுதிகளில் நடமாடி திரிகின்றனர்.
இந்நிலையில் காணி உரிமையாளர்கள் தெல்லிப்பழை பிரதேச செயலரிடம் , தமது காணிகளுக்குள் ஊடுருவும் திருடர்களை கட்டுப்படுத்தும் முகமாக தமது காணிகளை சுற்றி வேலி அடைத்து , அக்காணிகளை அறிக்கைப்படுத்த அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனை அடுத்து அப்பகுதியில் தமது காணிகளை சுற்றி வேலி அடைக்க பிரதேச செயலர் அனுமதி அளித்துள்ளார்.
அதேவேளை 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்த மாங்கொல்லை வைரவர் ஆலய திருத்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஆலயத்திற்கு மின்சார இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.