பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் ”செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் இணையம் ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் மாணவர்களுக்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளது.
விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளமான www.ugc.ac.lk ஊடாக சமர்ப்பிக்கலாம்.
2022 மற்றும் 2023 கல்வியாண்டில் சுமார் 43,000 மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்க்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி வெளியிடப்பட்டன. பரீட்சைக்குத் தோற்றிய 166,938 மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களில் இணைவதற்கு தகுதி பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, 2022 உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 149,487 பாடசாலை பரீட்சாத்திகளும் 17,451 தனியார் பரீட்சாத்திகளும் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.