”பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், சிறையில் விஷம் வைத்துக் கொல்லப்படலாம்” என அவரது வழக்கறிஞர் நயிம் பஞ்சுதா அச்சம் தெரிவித்துள்ளமை பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது” இம்ரான் கானைச் சிறையில் சென்று சந்தித்தபோது அவர் தனக்கு சிறையில் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் தனக்கு வழங்கப்படும் உணவில் விஷம் கலக்கப்படலாம் எனவும் தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமல்லாது சிறையில் தான் உளரீதியான பாதிப்பை எதிர் கொள்வதாகவும், தற்போது சிறிய அறையில் மாற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இம்ரான் கானைக் கொலை செய்வதற்கு சதி நடப்பதாக அவரது மனைவி புஸ்ரா பிவியும் கவலை தெரிவித்துள்ளார்.
இம்ரான் கானின் நிலை குறித்து இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது” இவ்வாறு நயிம் பஞ்சுதா தெரிவித்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டில் கடந்த ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி கைது செய்யப்பட்ட இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.