ஜேர்மன் தொலைக் காட்சிக்கு ரணில் விக்கிரமசிங்க வழங்கிய பேட்டி உள்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை அவருக்கு ஆதாயமானது. அதே சமயம் வெளியுலகில் குறிப்பாக மேற்கு நாடுகளின் மத்தியில் அது அவருடைய பிம்பத்தை உடைக்க கூடியது.
முதலில் அது எப்படி உள்நாட்டில் அவருக்கு லாபகரமானது என்று பார்க்கலாம். அதில் அவர் மேற்கு நாடுகளுக்கு எதிரான ஆசியாவின் குரலை எதிரொலிக்கிறார். அதன்மூலம் இந்தியாவை,சீனாவை,ரஷ்யாவை சந்தோஷப்படுத்த முயற்சிக்கிறார். இன்னொருபுறம் யுத்த வெற்றிகளை அபகரிக்க முற்படும் மேற்குக்கு எதிரான சிங்கள பௌத்தத்தின் விட்டுக்கொடுப்பற்ற வீரமான குரல் போல அவர் காட்சியளிக்கிறார். அது உள்நாட்டில் அவருக்கு ஆதரவைப் பெருக்கும்.குறிப்பாக சிங்கள கடும்போக்காளர்கள் மத்தியில் அவருடைய பிம்பத்தை உயர்த்தும்.
அந்த நேர்காணலின் தொடக்கத்திலிருந்து நேர்கண்டவர் பெருமளவுக்கு எதிர்க் கணியமாகத்தான் கேட்கிறார்.பொருளாதார நெருக்கடியின் விளைவுகளைக் குறித்து அவருடைய கேள்விகள் ரணில் விக்கிரமசிங்கவை மெல்ல மெல்ல எரிச்சலடைய வைக்கின்றன. ஒரு கட்டத்தில் சனல் நாலு வெளியிட்ட வீடியோ தொடர்பான கேள்வியின் போது.ரணில் வெளிப்படையாகச் சினத்தைக் காட்டத் தொடங்குகிறார்.அதிலும் குறிப்பாக,அனைத்துலக விசாரணை பற்றிய கேள்வியின்போது அவர் ஊடகவியலாளரை கோபத்தோடு எதிர்கொள்கிறார். வெள்ளைக்கார நாடுகள் ஆசிய நாடுகளை இரண்டாம் தரமானவைகளாகப் பார்க்கின்றன என்ற குற்றச்சாட்டை அவர் முன் வைக்கின்றார்.அனைத்துலக விசாரணைக்கு முற்றுப்புள்ளி என்றும் கூறுகிறார்.
இதில்,மேற்கத்திய நாடுகள் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளை தரக்குறைவாக பார்க்கின்றன என்ற விமர்சனம் புதியது அல்ல.இந்திய வெளியுறவு அமைச்சரின் உரைகளிலும் இதே தொனி காணப்படுகிறது. ஏற்கனவே தான் பதவியேற்ற புதிதில்,ரஷ்ய-யுக்ரைன் மோதல் தொடர்பான கேள்வி ஒன்றின்போது,ரணில் விக்கிரமசிங்க ஆசிய மைய அணுகுமுறை தொடர்பாக பேசியிருக்கிறார்.இது பொதுவாக ஆசிய,ஆபிரிக்க,லத்தீன் அமெரிக்க வட்டாரங்களில் காணப்படும் ஒரு கருத்து. உலகத்தை மேற்கத்திய கண்கொண்டு பார்க்க முடியாது என்பது. அது சரி.
ஆனால், எங்கே பிழைக்கின்றது என்றால், தன் நாட்டில் தமிழ் மக்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தும் ஒரு அரசியல் பாரம்பரியத்திலிருந்து வந்த ரணில் விக்கிரமசிங்க, வெள்ளைக்கார நாடுகளைப் பார்த்து எங்களை இரண்டாம் தரமானவர் களாக நடத்துகிறீர்கள் என்று கூறுவதுதான். எனவே வெள்ளைக்கார நாடுகளைப் பார்த்து;ஒரு ஊடகவியலாளரை பார்த்து; எங்களை இரண்டாந்தரமாணவர்களகக் கருதுகிறீர்கள் என்று கூறத் தேவையான யோக்கியதை எந்த ஒரு சிங்கள அரசியல் தலைவருக்கும் கிடையாது.
மேலும்,பிரித்தானிய மைய ஊடகமான சனல் நாலின் மீதான கோபத்தில் அவர் ஜெர்மனிய ஊடகத்தின் மீதும் பாய்கிறார். அது மேற்கத்திய ஊடகங்கள் மீதான ஒரு பொதுவான விமர்சனமாகவும் வெளி வருகின்றது. ஆனால் இங்கு கேள்வி எதுவென்றால், மேற்கத்திய ஊடகங்களும் சரி, எனைய நாட்டு ஊடகங்களும் சரி, இலங்கை விவகாரத்தில் தலையிடும் அளவுக்கு இலங்கையின் நிலைமை இருக்கிறது என்பதுதான். இங்கே இனங்களுக்கு இடையே இடைவெளிகள் உண்டு என்பதுதான்.தனக்குள் பிளவுண்ட ஒரு நாட்டை வெளிச் சக்திகள் இலகுவாகப் பிரித்துக் கையாளப் பார்க்கும் என்பதுதான் கடந்த பல தசாப்தகால இலங்கையின் அனுபவம் ஆகும்.
அதிலும் குறிப்பாக, போர்க்காலத்தில் தமிழ் மக்களைத் தோக்கடிப்பதற்கு உலகம் முழுவதும் இருந்து உதவிகளைப் பெற்ற ஒரு நாடு, குறிப்பாக, தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு மேற்கத்திய நாடுகளின் ஆசிர்வாதத்தை பெற்ற ஒரு நாடு, இப்பொழுது அனைத்துலக விசாரணை என்று வரும்பொழுது மட்டும் அது உள்நாட்டு விவகாரம் என்று கூறப் பார்க்கின்றது. தமிழர்களைத் தோற்டிப்பதற்கு வெளிநாட்டு உதவிகள் வேண்டும். ஆனால் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு வெளிநாட்டு உதவிகள் வேண்டாம்.எப்படி இருக்கிறது தர்க்கம்?
ஆனால் இது ரணிலுடைய தர்க்கம் அல்ல. சிங்கள பௌத்த கூட்டு உளவியலின் தர்க்கம்.தமிழ் மக்களைத் தோற்கடிப்பதற்கு எந்தப் பேயோடும் கூட்டுச் சேரத் தயார் என்று 1980களில் ரணிலுடைய மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தன கூறியிருந்தார். தமிழ் மக்களைத் தோற்கடிப்பதற்கு நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சில பேய்கள் நாட்டுக்குள் நிரந்தரமாகத் தங்கி விட்டன என்பதுதான் இப்போதுள்ள இலங்கை தீவின் யதார்த்தம் ஆகும்.
இதில் தொகுத்துக் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், தமிழ் மக்களைத் தோற்கடிப்பதற்கு வெளி உதவிகளைப் பெற்ற அதே அரசுக் கட்டமைப்பு இப்பொழுது தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கத்தக்க வெளிநாட்டு விசாரணையை வேண்டாம் என்று கூறுகின்றது. அதாவது இங்கே தமிழ் மக்களைத் தோற்கடிப்பதுதான் அவர்களுடைய ஏக இலக்கு. அனைத்துலக உதவிகளைப் பெறுவதும் அதற்கே, அனைத்துலக உதவிகளை நிராகரிப்பதும் அதற்கே.
இவ்வாறு கூறுவதன் மூலம் ரணில் விக்கிரமசிங்க உள்நாட்டில் சிங்கள பௌத்த கடும்போக்கு வாக்குகளைத் திரட்ட முடியும் என்று நம்புகின்றார். அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வாக்குகள் தனக்கு கிடைப்பதில் நிச்சயமின்மைகள் உண்டு என்று அவருக்குத் தெரிகிறது.தன்னை ராஜபக்சக்களோடு சேர்ந்துப் பார்த்தால், தமிழ் மக்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அவர் அஞ்ச முடியும். மேலும் கிழக்கில் பிள்ளையானின் வாக்குகளும் வடக்கில் தேவானந்தாவின் வாக்குகளும் கிழக்கில் ஓரளவுக்கு முஸ்லிம் வாக்குகளும் தவிர வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள் கொத்தாக தனக்கு விழாது என்பது அவருக்கு தெரிகிறது. தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற கட்சிகள் தனக்கு எதிராக நிற்கும் என்பதும் அவருக்கு தெரிகிறது. தனக்குத் தமிழ் வாக்குகள் கிடைப்பதில் இருக்கும் நிச்சயமின்மைகளைக் கவனத்தில் எடுத்து அவர் சிங்கள பௌத்த வாக்குகளை அதிகம் கவர்வது என்று முடிவெடுத்திருக்கலாம்.
அதனால்தான் அந்த நேர்காணலில் அவ்வளவு கடுமையாக நடந்திருக்கலாம்.ஆனால் இந்த விடயத்தில் சனல் நாலைப் போலவே ஜேர்மனிய ஊடகமும் அவருக்கு மறைமுகமாக நன்மைதான் செய்கின்றது.இரண்டுமே யுத்தவெற்றி வாக்குகளை அவரை நோக்கி ஒப்பீட்டளவில் திருப்பக் கூடியவை. ஜேர்மனிய தொலைக்காட்சிக்கு அவர் வழங்கிய நேர்காணலின் முதல் விளைவு இது. இரண்டாவது விளைவு, மேற்கத்திய அரசியல் பரப்பில் அவருக்குள்ள கவர்ச்சியை அந்த நேர்காணல் குறைக்கும்.
அவர் இந்தியாவைப் போல, ரஷ்யாவைப் போல, சீனாவை போல,மேற்கின் ஆதிக்கத்துக்கு எதிரான ஆசியாவின் குரலாக தன்னைக் காட்டப் பார்க்கின்றார்.ஆனால் அடிப்படையில் அங்கே தர்க்க வழு உண்டு.நாடு மேற்கத்திய நாடுகளிடமும் மேற்கத்திய நிதி நிறுவனங்களிடமும் அதிகம் தங்கியிருக்கும் ஒரு காலகட்டம் இது.மேற்கைப் பகைத்தால் பன்னாட்டு நாணய நிதியத்தின் உதவிகள் நெருக்கடிக்கு உள்ளாகும் என்பது அவருக்கு நன்றாக விளங்கும்.எனினும் அவர் மேற்கத்திய நாடுகளுக்கு எரிச்சலூட்டும் விதத்தில் ஏன் அந்த நேர்காணலில் கதைத்தார்?
மேற்கு நாடுகளுக்கு தன்னை விட்டால் வேறு தெரிவு இல்லை என்று அவர் நம்புகின்றாரா? மேற்கத்திய நிதி நிதி முகவர் அமைப்புகள் தன்னை விட்டால் வேறு யாரையும் கையாள்வது கடினம் என்றும் அவர் நம்புகிறாரா? சஜித் தன்னை ஒரு தலைவராக இனிமேல்தான் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு அவர் ஜேவிபியுடன் கூட்டச் சேர வேண்டியுள்ளது. ஆனால் ஜேவிபியை மேற்கு நாடுகளும் இந்தியாவும் ஆர்வத்தோடு பார்க்கவில்லை.இடதுசாரிப் பண்புடைய ஜேவிபி பலமடைவதை மேற்கு நாடுகள் முன்னெச்சரிக்கையோடுதான் அவதானிக்கின்றன. எனவே தெற்கில் காணப்படும் தலைமைத்துவ வெற்றிடம் ரணிலுக்கு வாய்ப்புகளை அதிகப்படுத்துகிறது. அவருடைய பேரத்தையும் அதிகப்படுத்துகின்றது.
அந்த துணிச்சலில்தான் அவர் துணிந்து இந்திய வெளியுறவு அமைச்சரைப் போல ஆசிய மைய நோக்கு நிலையில் இருந்து கருத்து தெரிவிக்கின்றாரா? அண்மையில் அவர் கியூபாவுக்கு சென்றிருந்த போதும், ஐநா கூட்டத் தொடரில் பங்கெடுப்பதற்கு அமெரிக்காவிற்குச் சென்றிருந்த போதும், பெர்லினுக்கு சென்றிருந்தபோதும், அவர் பேசியவற்றைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு சுயாதீனமான ஏனைய நாடுகளில் தங்குகிறாத முன்னுதாரணம் மிக்க ஒரு நாட்டின் தலைவரைப் போல அவர் பேசுவதைக் காணலாம்.
ஆனால் அவ்வாறு பெருமைப்படத்தக்க ஒரு அரசியல் கலாச்சாரத்தை அவர் பிரதிபலிக்கவில்லை என்பது அவருக்கும் தெரியும்; மேற்கு நாடுகளுக்கும் தெரியும். இங்கே உறவுகளை தீர்மானிப்பது அற நெறிகளோ நீதி நெறிகளோ அல்ல முழுக்க முழுக்க பச்சையான வியாபாரத்தனமான அரசியல், பொருளாதார,ராணுவ நலன்சார் தேவைகளே உறவுகளைத் தீர்மானிக்கின்றன. அந்த நலன் சார் விளையாட்டுக்குள் தன்னுடைய பேரம் அதிகமானது என்று ரணில் நம்புகிறார். அதனால்தான் ஜேர்மன் தொலைக்காட்சியில் அவ்வளவு வீரத்தைக் காட்டினார்