இலங்கை சினிமாத் துறையில் பிரபல நட்சத்திரமாகத் திகழ்ந்துவந்த மறைந்த ஜாக்சன் அன்ரனியின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை இராகமையில் இடம்பெறவுள்ளன.
அன்னாருக்கு அவரது ரசிகர்கள், பொது மக்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் தொடர்ச்சியாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கலை என்பது அனைவராலும் இலகுவில் தொட்டுணர முடியாத ஒன்று. ஒரு சிலருக்கு மட்டுமே அது உடலில் பிறப்பு முதலே கலந்து இருக்கும்.
கலையை அலங்கரிக்க சிலர் படைக்கப்படுவார்கள். அந்தவகையில், இலங்கையில் கலைக்காகவே அவதாரம் எடுத்த ஓர் அற்புத கலைஞன் தான் இந்த ஜாக்சன் அன்ரனி.
1958 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி ராகமவில் உள்ள பொடிவீ கும்புர எனும் கிராமத்தில் கொங்கனிகே பெனடிக்ட் , அன்ரனி ரோலின் பெரேரா ஆகியோருக்கு மகனாக பிறந்தவர்தான் இந்த கொங்கனிஜ் ஜோசப் மல்சி ஜாக்சன் அன்ரனி.
கொங்கனிஜ் ஜோசப் மல்சி ஜாக்சன் அன்ரனி என்ற இயற்பெயர் கொண்ட இவர் ஜாக்சன் அன்ரனி என்று அனைவராலும் அழைக்கப்பட காரணம் அவரது தனி முயற்சியால் உலகிற்கு தன்னை அறிமுகப்படுத்தி கொண்டதால் மட்டுமே !
பொதுவாக கலையில் ஆர்வம் இருந்தால் கல்விக்கு தூரம் இருக்கும் என்பார்கள்.
ஆனால், கல்வியிலும் சிறந்து விளங்கிய இவர் சிங்கள மொழி மற்றும் இலக்கியத்தில் கௌரவப் பட்டம் பெற்றவர்.
அத்தோடு, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வெகுஜன ஊடகத்தில் முதுகலைப் பட்டமும் இவர் பெற்றுள்ளார்.
1993 ஆம் ஆண்டு திரைத்துறையில் கால்பதித்தற்கு முன்னரே மேடை நாடக வரலாற்றில் இவரின் பெயரை பதித்துவிட்டார் இந்த ஜாக்சன் அன்ரனி.
திரைப்படம், நாடகம் மற்றும் தொலைக்காட்சியில் சிறந்த நடிகராக பிரகாசித்த இவர், சிறந்த நடிகருக்கான விருதை பதினாறு தடவைகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இலங்கையின் முதன்மையாக மூன்று ஊடகங்களிலும் ஒரு நடிகராக செயல்பட்ட இவர், பல்துறை வடிவங்களில் பொதுமக்கள் முன் தோன்றியவர் என்பதை மறந்துவிட முடியாது.
இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர், பாடலாசிரியர், வரலாற்றாசிரியர் என பன்முக கலைஞராக மக்கள் மனங்களில் இடம் பிடித்த இவர், மராசத், மதுர ஜவனிகா, லோமா ஹன்சா, தவாலா பீஷானா, அத், மோரா உள்ளிட்ட பிரபலமான மேடை நாடகங்களிலும், குரு கெதர, சிட்டி, அயோமா அன்டட லொகு துவ பாவ துக, பாவ கர்மா உள்ளிட்ட ஆகிய திரைப் படங்களும் தனது தனித்துவமான நடிப்பால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
இவ்வாறு புன்முக திறமைகளை தன் வசம் கொண்ட ஜாக்சன் அன்ரனி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்புக்காக அனுராதபுரத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தே அந்த கொடூர விபத்துக்கு முகம் கொடுத்தார்.
தலாவ – மொரகொட பிரதேசத்தில் அவர் பயணித்த கெப் ரக வாகனம் யானையொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில், கடந்த 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் ஜாக்சன் அன்ரனி, கடந்த 9 ஆம் திகதி இவ்வுலலை விட்டு நீங்கினார்.
பொரளையில் உள்ள ஜெயரத்ன Respect home இல் வைக்கப்பட்டிருந்த ஜாக்சனின் பூதஉடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த கலைஞர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், அவரது ரசிகர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதனையடுத்து கடவத்தையில் உள்ள அவரது வீட்டுக்கு பூதவுடல் கொண்டுசெல்லப்பட்டுள்ள நிலையில், தொடர்ச்சியாக மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் 3 மணியளவில் இராகம புனித பீட்டர் பால் தேவாலயத்தில் இடம்பெறவுள்ளன.
இலங்கை திரைத்துரையை சர்வதேசத்திற்கு எடுத்துச் சென்ற இந்த மகா கலைஞரான சகலகலா சக்திய ஜெக்சன் அன்ரனியின் மறைவு, இந்நாட்டின் கலைத்துறைக்கு ஏற்பட்டுள்ள ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது…
-பல்லவி