அமெரிக்கா வொஷிங்டன் நகரில் கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் மெலானி ஜோலிக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக பிரித்தானியாவின் THE FINANCIAL TIMES நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா-கனடா இடையே தூதரக பிரச்சினை நிலவி வரும் சூழலில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் காலிஸ்தான் செயற்பாட்டாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், இந்திய உளவு அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த மாதம் பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்ததுடன் இந்திய தூதரக உயரதிகாரி ஒருவர் நாட்டைவிட்டு வெளியேறவும் கனடா அரசாங்கம் உத்தரவிட்டது.
ஆனால், கனேடிய பிரதமரின் குற்றச்சாட்டுகளில் உள்நோக்கம் இருப்பதாக குறிப்பிட்டு, அவற்றை நிராகரித்த இந்தியா, கனடா தூதரக உயரதிகாரிகள் வெளியேறுமாறு உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரித்தானியாவின் THE FINANCIAL TIMES வெளியிட்ட செய்தியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மறுத்துள்ளதுடன், கனடா தரப்பில் இருந்தும் இதுவரையில் எவ்விதமான பதிலும் கிடைக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது,