காசாவிற்கான மின் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ள நிலையில், அந்த பகுதியின் ஒரே மின் நிலையத்தில் எரிபொருள் தீர்ந்துபோனதால் அதன் இயக்கம் நிறுத்தப்பட்டதன் காரணமாக நேற்று மின்சாரம் முடங்கியுள்ளது.
இதனால், ஏற்கெனவே இஸ்ரேலின் தீவிர வான்வழித் தாக்குதால் நிலைகுலைந்துபோயுள்ள அந்த பகுதி மக்கள், மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், மக்கள் மிக நெருக்கமாக வசிக்கும் அந்த மிகச் சிறிய பகுதிக்கு மின்சார விநியோகத்தைத் துண்டித்த இஸ்ரேல், உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை கொண்டு செல்ல முடியாத வகையில் அந்தப் பகுதியை முற்றுகையிட்டுள்ளது.
இஸ்ரேலின் கடுமையான விமானத் தாக்குதலால் காசாவின் பல்வேறு பகுதிகள் தரைமட்டமாகி வருகின்றன. மேலும், இந்தத் தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதையடுத்து, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்றியமையாத மின்சாரம் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.