முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி சரவணராஜாவுக்கு உயிருக்கு எவ்வித அச்சுறுத்தல் இல்லை என்றும் அவர் திடீரென வெளிநாடு சென்றமை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 25ஆம் திகதி இந்தியா செல்வதற்கு நீதிபதி விடுப்பு கோரி விண்ணப்பித்தபோது, அதற்கு அனுமதி வழங்கப்பட்டு செப்டம்பர் 24ஆம் திகதி அவர் திடீரென வேறு நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அரசாங்கத்திடம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரவணராஜாவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்திருந்த நிலையில் அவை குறித்து விசாரணை நடத்திய குற்றபுலனிவு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி சரவணராஜா 2021 ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி நீதவானாக நியமிக்கப்பட்ட அதேநேரம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் அவருக்குத் தேவையான சகல பாதுகாப்பையும் வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் முகவர் ஒருவர் ஊடாக விமானப் பயணச்சீட்டுகள் கொள்வனவு செய்யப்பட்டது என்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் அமெரிக்காவில் உள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட போதும் அந்த தொலைபேசி எண் செயல்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
கல்முனைப் பகுதியில் இருந்து விமானப் பயணச்சீட்டுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் ஷார்ஜா, நைரோபி, டெல்லி வழியாக ஒக்டோபர் 12ம் திகதி இலங்கை திரும்புவதற்கு டிக்கெட் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஷார்ஜாவை அடுத்து நைரோபிக்கு செல்ல நீதவான் விமான டிக்கெட்டை பயன்படுத்தவில்லை என்பது விமான நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீதிபதியின் வெளிநாட்டுப் பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. அவரது ஆவணத்தில் நைரோபியே அவரது இலக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் சேவையிலிருந்து ராஜினாமா செய்த பின்னர் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டைப் பயன்படுத்துவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய இரண்டு அதிகாரிகளும், உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்புக்காக 12 மணித்தியாலங்கள் உட்பட தினமும் நான்கு உத்தியோகத்தர்களும் ஈடுபடுத்தப்பட்டதாக முல்லைத்தீவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
மேலும் நீதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியான பொலிஸ் கான்ஸ்டபிள் பிரேமன், பாதுகாப்பு போதுமானதாக இல்லை என நீதிபதி ஒருபோதும் கூறவில்லை என்றும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிபதி தம்மிடம் கூறவில்லை என்றும் கூறியுள்ளார்.
நீதிபதி வெளிநாடு செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தனது காரை விற்றுவிட்டு செப்டம்பர் 23ஆம் திகதி வெளிநாடு சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதிமன்றில் கடமையாற்றி வரும், தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக நீதிபதி ஒருபோதும் தெரிவிக்கவில்லை என நீதிமன்றப் பதிவாளர் கூறியுள்ளார்.
இதேவேளை தனது கணவர் நீதிபதி என்ற முறையில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்பு இல்லாதது குறித்து குறிப்பிட்ட அவர் சமீபகாலமாக அவ்வாறான பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் தன்னிடம் கூறவில்லை எனவும் மனைவி குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 23 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் தனது கணவர் வெளியேறியதாகவும், அவர் வெளிநாடு செல்வது தனக்குத் தெரியாது என்றும்நீதிபதியின் மனைவி கூறியுள்ளார்.