நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை இன்று இரவு பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் கன மழையுடனான காலநிலை காரணமாக பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதற்கமைவாக நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக பெய்த கன மழையின் காரணமாக கொழும்பின் பல பகுதிகளும் நீரில் மூழ்கியிருந்தன.
கொழும்பு, மருதானை, பத்தரமுல்லை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வீதிகளே இவ்வாறு நீரில் மூழ்கியிருந்தன.
அதேநேரம் வீதிகளும் நீரில் மூழ்கியிருந்த காரணத்தினால் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தது.
இதேவேளை மலைநாட்டில் நிலவும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக காசல்ரி நீர்தேக்கம் பெருக்கெடுக்கும் நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைவாக வான்கதவுகளை திறந்துவிட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் இதனால் தாழ்வு பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை நில்வளா கங்கையின் தாழ்நிலப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த ஆற்றை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு குறித்த திணைக்களம் கோரியுள்ளது.
அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக, இதுவரை 2 ஆயிரத்து 297 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.