தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த காலங்களில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் போது மக்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் தற்பொழுது ஓரளவு குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கான முன்னெடுப்புகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் நிலையில் இது தொடர்ச்சியாக சிறப்பான முறையில் முன்னெடுக்க அனைவரும் இணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுகளைக் காண்பதன் மூலம் அத்தியவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்து நாட்டு மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதற்கான பணிகளே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.
மேலும், தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க் கட்சிகளில் இருக்கின்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.