”அம்பிட்டிய தேரர் வாயைத் திறந்தால் தகாத வார்த்தைகளையே பேசுகின்றார்” எனவும், மயிலத்தமடுவில் மாடுகளின் மேய்ச்சல் தரையில் கெளதமரை நிற்கவைத்துள்ளனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விசனம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” ஜனாதிபதி விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலம், நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய கோரிக்கையை ஏற்று, உடனடியாக பெருந்தோட்டங்களில் உள்ள பயிரிடப்படாத தரிசு நிலங்களை பிரித்து பெருந்தோட்ட குடும்பங்களுக்கு வழங்குகிறேன் என வாக்குறுதி அளித்தார்.
அதற்கு “மனோ கணேசன் திட்டம்” என பெயரும் வைக்கிறேன் எனவும் பகிரங்கமாக வாக்குறுதி வழங்கினார்.அப்போது “ஐயா சாமி, எனது பெயர் வேண்டாம், எனது மக்களுக்கு காணி கொடுங்கள். அது போதும்” என்று நான் தெரிவித்தேன். இன்று எங்கே அந்த பெருந்தோட்டங்களில் உள்ள பயிரிடப்படாத தரிசு நில காணிகள்?
கடைசியாக இப்போது மயிலத்தமடு கால்நடை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில், அதிகாரிகளை அழைத்து பணிப்புரை விடுத்தார்.
இன்று, அங்கே புத்தர் சிலையை கொண்டு வந்து நிறுத்தி உள்ளார்கள். அங்குள்ள அந்த அம்பிட்டிய பிக்கு வாயை திறந்தால் தெருச்சண்டியன் போன்று தகாத வார்த்தைகள் பேசுகின்றார். மேய்ச்சல் தரையில் பாரம்பரியமாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்த மக்களுக்கு நிலம் கையளிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, இப்போது கெளதமரையும் அங்கே இவர்கள் கொண்டு வந்து நிறுத்தி இருப்பது, மயிலத்தமடு, “மாடு” களுக்கே அடுக்காது” இவ்வாறு மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.