சீனாவின் கனவுத் திட்டமான ‘புதிய பட்டுப் பாதை திட்டம்’ Belt and Road Initiative (BRI) குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது பாராட்டினை தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் இடையே வர்த்தகத் துறையினை மேம்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட குறித்த திட்டமானது, ஆரம்பிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதனைக் கொண்டாடும் விதமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களும் பெய்ஜிங்கில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்று வருகின்றனர்.
அந்தவகையில் குறித்த நிகழ்வுக்கு தாம் அழைக்கப்பட்டமைக்கு நன்றி தெரிவித்த புடின் சீனாவுக்கு, ரஷ்யா தனது முழுமையான ஆதரவை வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இத்திட்டத்தின் மூலம் கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளிடையான வர்த்தகத்தை ஆழப்படுத்த முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.
உக்ரேன் மற்றும் ரஸ்யா இடையே இடம்பெற்று வரும் போர் காரணமாக நாட்டை விட்டு வெளியேராமல் இருந்த புடின், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அழைப்பின்பேரில் குறித்த மாநாட்டில் முதன் முறையாகப் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.