வடக்கில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக ஜம்போ கச்சானின் விளைச்சலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாதன்குடியிருப்பு, பிரமந்தனாறு, உழவனூர் ஆகிய பகுதிகளிலேயே இந்த ஜம்போ கச்சான் செய்கைக்கு மேற்கொள்ளப்படுகிறது. குறித்த பகுதிகளில் கச்சான் பயிர்செய்கைக்கு சிறந்த இடங்களாக காணப்படுகின்றன.
கடந்த வருடம் ஜம்போ கச்சான் செய்கையில் பாரியளவு விளைச்சலால் விவசாயிகள் அதிக இலாபம் பெற்றிருந்தனர். ஆனால், இவ்வருடம் இந்தநிலைமை அப்படியே தலைக் கீழாக மாறியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நிலவிவரும் கடும் வறட்சி காரணமாக ஜம்போ கச்சான் அறுவடையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதனால், சில விவசாயிகள் ஜம்போ கச்சான் அறுவடையை செய்யாது கைவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். ஜம்போ கச்சான் தற்பொழுது நான்கு மாதம் கடந்த நிலையில் அறுவடை செய்ய முடியாத நிலையில், கச்சானின் விளைச்சலும் பாரிய வீழ்ச்சியாக காணப்படுகிறது.
பல லட்சம் ரூபாய் செலவழித்து ஜம்போ கச்சான் செய்கையில இடுபட்ட விவசாயிகள் ஒருகிலோ கச்சானைக் கூட இவ்வருடம் விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய அதிகாரிகள், நஷ்ட ஈட்டினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.