மின்கட்டணத்தை உயர்த்தியமையானது சட்டவிரோதமான செயற்பாடு என்றும், இவ்விடயம் தொடர்பாக பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு சபாநாயகர் அறிவிப்பொன்றை விடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று சபையில் வலியுறுத்தினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”31 பில்லியன் ரூபாய் நஷ்டத்தை சரிசெய்ய, 22 வீதத்தால் மின்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக பொது மக்களின் கருத்துக்கள் கோரப்பட்டிருந்தன. ஆனால், 22 வீதத்தால் அன்றி தற்போது 10 வீதத்தால் மின்கட்டணத்தை உயர்த்த, எந்தவொரு புள்ளிவிபரங்களும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள கட்டண முறைமையிலேயே மின்சார சபை இலாபமாகத்தான் இயங்கி வருகிறது. எனவே, மின்கட்டணத்தை உயர்த்த வேண்டியத் தேவைக்கிடையாது. அத்தோடு, சட்டவிரோதமாக தான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு இரண்டு முறை மட்டும்தான் மின்கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள முடியும் என்ற நிலைமை இருக்கும்போது, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவானது 4 தடவைகள் மின்கட்டணத்தை உயர்த்த அனுமதியளித்துள்ளது.
இது பிழையான நடவடிக்கையாகும்.இவ்வாறு பிழையான முறையில் மின்கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ள விவகாரம் குறித்து பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு சபாநாயகர் அறிவிப்பொன்றை விடுக்க வேண்டும்” இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.