இஸ்ரேல் – பாலஸ்தீன் இடைய இடம்பெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பிரிக்ஸ்(Brics) அமைப்பினால் மாத்திரமே முடியும் என தான் நினைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது குறித்து உதய கம்மன்பில இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாவது” இஸ்ரேல்- பாலஸ்தீன யுத்தத்தினால் காஸா பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போரினால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், இப்போரை நிறுத்த எந்தவொரு நாட்டினாலும் முடியாமலுள்ளது.
பிரித்தானியாவினால்தான் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்த யூதர்களின் பிரச்சினையை மத்திய கிழக்குக்கு திசைத்திருப்பவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே, இப் பிரச்சினைக்கு காரணமான அமெரிக்கா, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா என்ற நான்கு பிரதான நாடுகள், ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைத்துவத்தை வகிக்கும்வரை, இப் பிரச்சினையைத் தீர்க்க மத்தியஸ்தம் வகிக்க முடியாது.
இன்று நாம் நாடாளுமன்றில் தீர்மானமொன்றை நிறைவேற்றி, இதனை தீர்க்க மத்தியஸ்தம் வகிக்குமாறு ஐ.நா.விடம் கோரினாலும், ஐ.நா.வுக்கு அதனை செய்ய பலம் இல்லை. இந்தப் பிரச்சினைக்கு மத்தியஸ்தத்தை வகிக்க, வளர்ச்சியடைந்துவரும் நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பினாலேயே முடியும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடு. இந்தியா, சீனா, ரஸ்யா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்த்துடன்தான், இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வொன்று காணப்பட வேண்டும்” இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.