இலங்கையில் மீண்டும் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக தெரிவித்துள்ளார்.
அத்துடன் நுகர்வோருக்குத் தேவையான எரிபொருளை எவ்வித சிக்கலும் இன்றி வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” காசா பகுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக உலக சந்தையில் அனைத்து எரிபொருள் வகையினதும் விலை, கிட்டத்தட்ட 4 சதவீதத்தால் மீண்டும் அதிகரித்துள்ளது.
அடுத்த வருடம் ஜூன் மாதம் வரை அவசியமான எரிபொருளுக்கான டெண்டர் செயற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. இலங்கை வரலாற்றில் முதன் முதலாக எமக்கு அவசியமான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக 200 மில்லியன் டொலர்கள் கையிருப்பை நாம் பேணிவருகின்றோம்.
மேலும், எரிபொருள் கொள்வனவுக்காக கடந்த காலங்களில் பெற்றிருந்த கடன்களை மீளச்செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எரிபொருள் சுத்திகரிப்புப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கத் தேவையான நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம்” இவ்வாறு டி.வீ சானக தெரிவித்துள்ளார்.