”காஸாவிலுள்ள இலங்கையர்களைப் பாதுகாக்க வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல்- பாலஸ்தீனத்திற்கு இடையே இடம்பெற்று வரும் போர் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே சஜித் பிரேமதாஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”காஸா பகுதியில், இடம்பெற்று வரும் போரினால் இஸ்ரேலில் பணியாற்றிய களனி பகுதியில் வசித்த 49 வயதுடைய அனுலா ஜயதிலக என்பவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த யட்டவர பண்டார எனும் இலங்கையர் காணாமற்போயுள்ளார் என்றும் இவர் தொடர்பாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த மோதலில் இன்னொரு இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார். வடக்கு காஸாவிலிருந்து தெற்கு காஸா நோக்கி சென்றவர்களில் 17 இலங்கையர்கள் இருப்பதாகவும் அவர்கள், எகிப்தின் ரபா, எல்லை வழியாக எகிப்துக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஜோர்டானில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை அவர்கள் தொடர்பாக தகவல்கள் தெரியவில்லை. பாலஸ்தீனத்தில் 6 இலங்கையர்களும், காஸா முனையில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 17 இலங்கையர்களும் வாழ்ந்து வருகின்றனர். இஸ்ரேலில் 8 ஆயிரம் இலங்கையர்கள் வாழுகிறார்கள்.
இவர்களில் 1000 பேரளவில் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் என தெரியவந்துள்ளது. யாராக இருந்தாலும், அவர்கள் அனைவரையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு சஜித் தெரிவித்துள்ளார்.