நாட்டில் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 168 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இதில் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அதிர்ச்சித் தகவலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன இத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”பாலியல் துஷ்ப்பிரயோகங்களினால் பாதிக்கப்பட்ட சிறுமிகளில் 22 பேர் தற்போது கர்ப்பிணிகளாக உள்ளனர். சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தரவுகளின்படி, 2021 ஆம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 11 ஆயிரம் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதுமட்டுமல்லாது 2022 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ள சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களில் குறைந்தது 41 வீதமானவை பாலியல் துஷ்பிரயோகத்தின் கீழ் வருகின்றன” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆண்டு செப்டெம்பரில் பதிவான சம்பவங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, அது இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.