2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
2024 ஜனவரி முதல் சொத்து வரி மற்றும் Inheritance Tax போன்ற புதிய வரிகளை விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்திற்கான பொது முன்மொழிவுகளை கோரி நிதி அமைச்சின் செயலாளர் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவது வழமை என்றாலும் இவ்வருடம் அவ்வாறான நடைமுறை பின்பற்றப்படவில்லை என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணையை வெளியிட விடுக்கப்பட்ட நிபந்தனைக்குப் பிறகு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது போல் 2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் ஐ.எம்.எப். முன்மொழிவுகளின் அடிப்படையில் இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச வருமானத்தை தற்போதைய 9 வீதத்தில் இருந்து 12 வீதமாக அதிகரிப்பதற்காக 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக புதிய வரிகளை அறிமுகப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வருமான வரிக் கோப்புகளும் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் திறக்கப்படும் என்றும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.