மின்சாரத்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் 3 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க மின்சக்தி சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக அமைச்சரவை அங்கீகாரத்தின் பிரகாரம் மின்சார விநியோகம் தொடர்பான பொதுக்கொள்கை வழிகாட்டிகளை தயாரிப்பதற்காக மின்சார விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய தற்போது காணப்படுகின்ற பொதுக்கொள்கை வழிக்காட்டல்களுக்கு அமைய ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார கட்டண திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.
ஆனாலும் அதற்கமைவாக செயற்படுவதால் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு குறித்த கட்டண திருத்த மீளாய்வு காலப்பகுதியை மூன்று மாதங்களாக திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இலங்கை மின்சார சபை மின்சக்தி பணித்தேர்வு கணக்காய்வு நடைமுறைப்படுத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் நீர் மின் உற்பத்தி பற்றிய முன்கூட்டிய அறிவித்தல்களை பலப்படுத்துவதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இயலுமான வகையில் தற்போது நடைமுறையிலுள்ள பொதுக்கொள்கை வழிக்காட்டல்களை திருத்தம் செய்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.