பதிவு செய்யப்பட்ட மருந்துகளை மாத்திரம் இலங்கைக்கு கொண்டு வருமாறும், பதிவு செய்யப்படாத மருந்துகள் நாட்டிற்கு கொண்டு வரப்படும் பட்சத்தில் அந்த மருந்துகள் பற்றிய தேவையான தரவுகளை சரிபார்த்து தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையினால் அனுமதி பெறுமாறும் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை, அரச மருந்துக் கூட்டுத்தாபனம், அரச மருந்துப் பொருட்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்ட கூட்டுத்தாபனம் மற்றும் மருத்துவ விநியோகப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் இன்று (01) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், மேற்படி முறைக்கு புறம்பாக எவரேனும் செயற்பட்டால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அத்துடன், அவசரகால கொள்வனவுகளின் கீழ் மருந்துகளை கொள்வனவு செய்வதை இடைநிறுத்துமாறும், பற்றாக்குறையாக உள்ள மருந்துகளை பரிந்துரைக்கப்பட்ட முறையில் விரைவில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இந்நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே எமது அனைவரினதும் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், அதனை கூட்டாகச் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
புற்றுநோய், சிறுநீரக நோய்கள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், இந்த மருந்துகளை தட்டுப்பாடு இன்றி நாட்டில் பேணுவதற்கும், சகல மருந்துகள் தொடர்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்துமாறும் சுகாதார அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
இதன்போது, சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, மேலதிக செயலாளர்களான டொக்டர் சமன் ரத்நாயக்க, வை.எல்.எம். நவவி, மருத்துவப் பொருட்கள் துணை இயக்குநர் ஜெனரல் டி.ஆர்.கே. ஹேரத், அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி அஜித் மெண்டிஸ், தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் தலைவர் கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம, அரச மருந்துப் பொருட்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி உத்பலா இந்திரவன்ச மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.