உள்ளுராட்சி நிறுவனங்களில் நிரந்தரமற்ற 8 ஆயிரத்து 400 பணியாளர்கள் நிரந்தர அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் விசேட திட்டத்தின் ஊடாக அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய, சுகாதார மற்றும் கல்வித் துறைகளுக்கு 9 பில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
அத்துடன் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் மாகாண சபைகளுக்குட்பட்ட உள்ளுராட்சி நிறுவனங்களில் நிரந்தரமற்ற 8,400 பணியாளர்கள் நிரந்தர அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
கடந்த 36 ஆண்டுகளில் செய்யத் தவறிய பணிகளை 1 1/2 ஆண்டுகளில் முன்னெடுத்து வருகின்றோம். வட மத்திய மற்றும் வட மாகாணங்களில் தற்போது வீதிகளை அடையாளம் கண்டு, பட்டியலிடும் பணிகள் நிறைவடைந்துள்ளன. எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் இரண்டு மாகாணங்களிலும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன. எஞ்சிய 6 மாகாணங்களுக்கான செயற்றிட்டத்தை 2024 ஆம் ஆண்டில் செயற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்” இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.