தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இந்தியாவுடனான தங்கள் ஈடுபாட்டை வலுப்படுத்த வேண்டும் என வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர், இந்த விடயத்தில் தமிழ் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்களிடம் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
1983-87 காலப்பகுதியில் தமிழ் கட்சிகளும் அதன் தலைவர்களும் புதுடில்லி மற்றும் தமிழ்நாட்டிலுள்ள இந்தியத் தலைவர்களுடன் அடிக்கடி தொடர்பு இருந்ததை போன்று தற்போது அவ்வாறான உறவு இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் உட்கார்ந்து கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவது மட்டும் பலன் தராது என்றும் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார்.
அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் தீர்விற்காக இந்தியாவிற்குள் குரல் இருக்க வேண்டும் என்றும் புதுடில்லி மற்றும் தமிழ்நாட்டுத் தலைவர்களுடன் தமிழ்த் தலைவர்கள் நெருங்கிய உறவைப் பேணினால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றும் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் தொடர்பாக மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் வரதராஜப் பெருமாள் கூறியுள்ளார்.