வங்குரோத்து நிலையில் இருந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஜனாதிபதியினால் தற்போது சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களின் நம்பிக்கையைப் பெற முடிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஒற்றுமையோடு நாட்டின் விரிவான அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு ஆத்தாவை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நல்வாழ்வை முன்னேற்றுவதை மையமாகக் கொண்டு 1.6 மில்லியன் அரச மற்றும் எட்டு மில்லியன் தனியார் துறை ஊழியர்களையும் மேம்படுத்துவதற்கான முயற்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இதன் வெற்றியானது எதிர்காலத்தில் மின்சாரம், எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் பொருளாதார நெருக்கடி உக்கிரமடைந்துள்ளதாகவும், வரிக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தினால் அரசாங்க வருமானம் விரைவாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.