நுவரெலியா தபால் நிலையத்தை இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு விற்பனை செய்வதாக அராசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த போராட்டத்தை நாளை நண்பகல் 12 மணிக்கு நடத்துவதற்கு ஒன்றிணைந்த தபால்; தொழிற்சங்க முன்னணி தீர்மானித்துள்ளது.
அத்துடன் குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக நுவரெலியா நகரத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் நாளை நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரை மூடுவதற்கு நகர வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை வவுனியா தபால் அலுவலக ஊழியர்கள் 48 மணிநேர பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நுவரெலியா தபால்; அலுவலகத்தினை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் ஒன்றினைந்த தபால் தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக வவுனியா தபால் அலுவலகர்களும் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, அலுவலக கடமைகள் உட்பட அனைத்து கடமைகளில் இருந்து மன்னார் தபால் ஊழியர்கள் விடுமுறை எடுத்து கொண்டதுடன் நாளைய தினமும் கடமைகளை மேற்கொள்ளாது தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் கறுப்புக்கொடிகளும் கட்டப்பட்டிருந்ததுடன் நுவரெலியா தபாலகம் விற்கப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்த பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.