இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய யாப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட “சித்திரசிறி குழுவின் அறிக்கை” அமைச்சரவை உபகுழுவிற்கு நேற்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற சட்டமொன்றின் ஊடாக இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பொன்றை அறிமுகம் செய்வதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டி. சித்ரசிறி தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
இந்த குழுவின் அறிக்கை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் கிரிக்கெட் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் தலைவரான வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் நேற்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
கிரிக்கெட் தொடர்பாக தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது மிகவும் சிக்கலானது மற்றும் ஆழமானது என்பதனால், அதனை இடைக்கால நிர்வாகக் சபை நியமிப்பதால் மாத்திரம் தீர்க்க முடியாது என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாக உள்ளது.
மேலும், இதற்காக நிரந்தரமான மற்றும் உறுதியான தீர்வை வழங்குவது அவசியம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இந்த உத்தேச புதிய யாப்பு வரைவின் மூலம் இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபை நியமிக்கும் முறையை முற்றாக மாற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதுடன் அதன் உள்ளடக்கம், நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் என்பனவும் திருத்தப்பட்டுள்ளன.