கிரிக்கெட் அணிக்குள்ளும் வீரர்கள் மத்தியிலும் எந்தவித பிரச்சினையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை கிரிக்கெட் அணி மீண்டும் எழுச்சி பெறும் என நான் நம்புகின்றேன். சரியான அடித்தளம் மற்றும் ஒற்றுமை என்ற தற்காலிக பிரச்சினை இருப்பதால் இலங்கை கிரிக்கெட்டே சரிவில் இருக்கின்றது என கூறமுடியாது.
இந்த ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இலங்கை அணி மோசமாக விளையாடியிருந்தாலும் கடந்த ஆண்டு ஆசியக் கிண்ணத்தை வென்றது. அத்தோடு இந்த ஆண்டு இடம்பெற்ற ஆசிய கிண்ண தொடரில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
அணிக்குள்ளும் வீரர்கள் மத்தியிலும் எந்தவித பிரச்சினையும் கிடையாது பிரச்சினை இருக்கும் இடங்களை கண்டுகொண்டு அதனை சரிசெய்ய வேண்டும்.
நிச்சயமாக, அதற்கு சிறிது நேரம் எடுக்கும், எவ்வாறாயினும், எமது வீரர்களை இழிவாகப் பார்க்காமல், போட்டிகளின் முடிவைப் பொருட்படுத்தாமல் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.