தமது இலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்படும் சீனாவின் எந்த முதலீட்டு நடவடிக்கைகளையும் வடக்கு கிழக்கில் அனுமதிக்கக்கூடாதென நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.
“இலங்கையிலே அபிவிருத்தி என்ற போர்வையிலே சீனாவினால் வீதிகள் போடப்பட்டன. ஆனால் வட்டி வீதம் கூடிய நிலையிலேயே தன்னுடைய லாபம் கருதியே இலங்கை அரசாங்கத்திற்கு சீன அரசாங்கம் இந்த வேலைகளை செய்து கொடுத்தது.
அதேபோல் போர்ட் சிட்டியும் சீனா தனக்கான ஒரு பிராந்திய இடமாக போர்ட் சிட்டியை வைத்துக் கொண்டது.
அம்பாந்தோட்டை விமான நிலையம் அம்பாந்தோட்டை துறைமுகம் இவ்வாறு ஒட்டுமொத்த இலங்கையின் வருமானத்தின் முக்காவாசி பங்கை வட்டி விகிதமாக கட்டுவதற்கான நிலைமையை சீனா உருவாக்கியுள்ளது.
அதனால் தான் இப்போது பொருளாதார ரீதியாக நாங்கள் மீள முடியாது நிலையில் இருக்கிறோம்.
இப்பொழுது சீனா மீண்டும் வடக்குக் கிழக்கிலே குறிப்பாக வடக்கை தன்னகத்தே கொண்டு வருவதற்கான நோக்கத்தின் அடிப்படையில் செயற்படுகின்றது.
எங்களுடைய பிரதேசத்தை மையமாக கொண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் முரண்பாடுகள் தோன்றுகின்ற போது எங்களுடைய பிரதேசம் பாதிக்கப்படுகின்ற நிலை ஏற்படும்.
நாங்கள் இந்தியாவை பகைத்துக் கொண்டு அல்லது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உள் முரண்பாடுகள் காரணமாக வடக்குக் கிழக்கிலே பாதிப்பு ஏற்படுகின்ற சூழலை அனுமதிக்க முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.