இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷம்மி சில்வாவிடமிருந்து ஜே.வி.பி. பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுவதை முடிந்தால் நிரூபித்துக் காண்பிக்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க சவால் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா ஜே.வி.பிக்கு நிதி வழங்கியுள்ளதாக பிரசன்ன ரணதுங்க நேற்று ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.
பிரசன்ன ரணதுங்க யார்? உயர்நீதிமன்றில் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள். கப்பம் பெறும் நபர்தான் இவர்.
அண்மையில் இடம்பெற்ற வழங்கொன்றில் கப்பம் கோரிய குற்றத்திற்காக 20 இலட்சம் ரூபாய் நஷ்ட்டை வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2 அரைக்கோடி தண்டப்பணம் செலுத்த வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 4 வருட சரீரப் பிணையில்தான் பிரசன்ன ரணதுங்க உள்ளார்.
இந்த நிலையில், ஷம்மி சில்வாவின் பணம் எமக்கு வந்ததாக இவர் கூறுகிறார். நாம் அவரைக் கண்டதுகூட கிடையாது.
பிரசன்ன ரணதுங்க இதுதொடர்பாக நாடாளுமன்றில் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்.
இதுதொடர்பாக விசாரணை நடத்துங்கள்.
நேற்று எதிர்க்கட்சித் தலைவரினால் நாடாளுமன்றுக்கு தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, நாம் இருக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டாலும் வாக்கெடுப்பு இடம்பெறாது என்பது தெரியும். இது ஏகமனதாக கொண்டுவரப்பட்ட தீர்மானமாகும்.
எனவே, இல்லாத வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டியத் தேவையில்லை என்றே நாம் சபையில் இருக்கவில்லை.
ஷம்மி சில்வாவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற தேவை எமக்கு இருக்கவில்லை.
விளையாட்டுத் துறை அமைச்சரிடம் நான் தனிப்பட்ட ரீதியாகவே கிரிக்கெட் சபைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.