வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு வரவுசெலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டணம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி கருத்துத் தெரிவிக்கையில் ”சர்வதேச விசாரணையே எமக்கு தேவை. நிதி கோரி நாம் போராடவில்லை. நிதி எமக்கு தேவையில்லை,நீதியே வேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளை தேடி சுமார் 14 ஆண்டுகளுக்கு மேலாக தாம் தொடர்ச்சியாக போராடி வருகின்றோம். இலங்கை அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சர்வதேச விசாரணை ஒன்றே தேவை எனக் கூறி தாங்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.
சர்வதேச சமூகத்தின் பார்வையில் எங்களுடைய போராட்டம் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் விதமாக நேற்றைய தினம் வெளியிடப்பட்ட வரவுசெலவு திட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நிதி ஒதுக்கப்பட்ட விடயம் கண்டனத்துக்கு உரியது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய நாம் தொடர்ச்சியாக எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்காகவே போராடி வருகின்றோம். இந்நிலையில் எங்களுடைய போராட்டத்தை சிதைக்கும் வகையில் அதற்கு இழப்பீடு வழங்குவதாகக் கூறி சர்வதேச சமூகத்தை ஏமாற்றப் பார்க்கின்றனர்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.