வெல்லம்பிட்டிய ஜயவெராகொட வித்தியாலத்தில் கொங்ரீட் சுவர் உடைந்து விழுந்து, சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
அத்தோடு, நாட்டில் 74 பாடசாலைகளின் கட்டடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வெல்லம்பிட்டிய ஜய வெராகொட வித்தியாலத்தில் நேற்று காலை துயரச் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.
6 பாடசாலை மாணவர்கள் இந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில், அதில் ஒரு சிறுமி உயிரிந்துள்ளார்.
ஏனைய 5 மாணவர்களும் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த பாடசாலையின் அதிபர் மீதும் ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இவர் தற்போது தேசிய வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
10 வருடம் பழைமையான நீர்க்குழாய் பொறுத்தப்பட்டிருந்த கொங்ரீட் சுவர் உடைந்து விழுந்தமையே இந்த துயரச் சம்பவத்திற்கு காரணமாகும்.
இதுதொடர்பாக வெல்லம்பிட்டிய வலயக்கல்விப் பணிப்பாளர் நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, பொலிஸாரும் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போது மேல்மாகாண பிரதம செயலாளர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளரின் ஆலோசனைக்கு இணங்க, மாகாண கல்வி அமைச்சினால் ஐவர் அடங்கிய குழுவொன்று இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதுதொடர்பான விசாரணை அறிக்கை கிடைத்தவுடன், நான் இதனை சபையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பேன்.
இன்று குறித்த பாடசாலைக்கு விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.
















