நாட்டில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக் கிண்ணத் தொடர் தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டமையால், சுமார் 100 மில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை கிரிக்கெட் பிரச்சினை தொடர்பாக சுமார் 45 நிமிடங்கள் ஐ.சி.சி. கலந்துரையாடியது.
நான் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணத் தொடரை இலங்கையில் நடத்துமாறு அவர்களிடம் வலியுறுத்தியிருந்தேன்.
எனினும், தடை விதிக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில் தொடரை நடத்த முடியாது எனத் தெரிவித்தார்கள்.
குறைந்தது கிரிக்கெட் தொடர்களில் விளையாடவேனும் அனுமதிக்க வேண்டும் என நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், நான் தான் கிரிக்கெட்டை தடை செய்யுமாறு ஐ.சி.சி.க்கு கடிதம் எழுதியதாக பொய்யான குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டது.
கிரிக்கெட்டுக்குள் அரசியல் தலையீடு அதிகரித்துள்ளதாக ஐ.சி.சி. குற்றஞ்சாட்டியே, நாட்டில் நடைபெறவிருந்த தொடரை தென்னாப்பிரிக்காவுக்கு ஐ.சி.சி. மாற்றியுள்ளது.
இதனால் நாட்டுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 100 மில்லியன் டொலர் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.