நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் மழையுடன் கூடிய காலநிலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதால் பதுளை மாவட்டத்தில் 880 பேர் பாதுகாப்பான 11 இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதில் 277 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்தார்.
இதேநேரம் வெலிமடை – பதுளை வீதியில் இரவு வேளைகளில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்குமாறும் மாவட்ட செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, தற்போது பெய்து வரும் கடும் மழையை கருத்தில் கொண்டு இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
முதலாம் மற்றும் இரண்டாம் கட்டத்தின் கீழ் 04 மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவற்றுள் இரத்தினபுரி, பதுளை, கண்டி, கேகாலை மாவட்டங்களின் பிரதேச செயலகப் பிரிவுகளும் அடங்கும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.