மட்டக்களப்பு,மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில், மாவீரர் நாளன்று போலீசார் பெருமளவுக்குத் தடைகளை ஏற்படுத்தினார்கள்.அத் துயிலுமில்லத்தின் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவர்களை அடிக்கடி கூப்பிட்டு விசாரித்தார்கள்.அக் குழுவிற்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். அந்த துயிலுமில்லத்தின் ஒரு பகுதியில் மலைக் கல்லில் பொறிக்கப்பட்டிருந்த கார்த்திகை 27 என்ற எழுத்தை அகற்றுமாறு கேட்டார்கள். கொடிகளை அகற்றச் சொல்லியும், பாடல்களை நிறுத்தச் சொல்லியும், ஒலிபெருக்கியை நிறுத்த சொல்வியும்,தொடர்ச்சியாக அறிவுறுத்தல்களை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.சுடர் வணக்க நேரத்தின் போது ஒலிபெருக்கி இருக்கவில்லை.வணக்கப் பாடல் இருக்கவில்லை.மணியோசை கேட்கவில்லை. பொது அறிவிப்பும் இருக்கவில்லை. ஆனால் போலீசாரின் அத்தனை தடைகளின் மத்தியிலும், மக்கள் தாமாக நேரத்தைக் கணித்து குறித்த நேரத்தில் தீப்பந்தங்களுக்கு முன்னே போய் நின்று தாமாகச் சுடர்களை ஏற்றியிருக்கிறார்கள்.
தமிழ் பகுதிகள் முழுவதிலும் மக்கள் தன்னியல்பாக; பொது அறிவிப்பின்றி; வணக்கப் பாடல் இன்றி; மணியோசை இன்றி; குறித்த நேரத்தில் தாங்களாக சுடரை ஏற்றியமை என்பது மாவடி முன்மாரி துயிலுமில்லத்தில் தான் நடந்தது.
அதுதான் மக்கள் மயப்பட்ட வணக்க நிகழ்வு.பொது அறிவிப்புக்குக் காத்திருக்காமல் மக்கள் இயல்பாக வணக்கம் செலுத்துவது.
அதுபோலவே கிழக்கில் மற்றொரு துயிலும் இல்லம் அமைந்திருக்கும் தரவையில் போலீசார் தடைகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அத்துயிலுமில்லம் அமைந்திருக்கும் காணி வனவளத் திணைக்களத்துக்கு சொந்தமானது. அதைக் காரணமாகக் கூறி மாவீரர் நாளுக்கு சில நாட்களுக்கு முன்னதாகவே துயிலுமில்லத்தில் ஏற்கனவே கட்டப்பட்டிருந்த பொதுச்சுடருக்கான பொதுப் பீடத்தை போலீசார் உடைத்திருக்கிறார்கள். வனவளத் திணைக்களத்தின்அனுமதியின்றி கட்டப்பட்டது என்ற சட்டக் காரணத்தைக் கூறியிருக்கிறார்கள். மேலும் வணக்க நிகழ்வின் போது அதைக் குழப்பும் விதத்தில் அங்கு கட்டப்பட்டிருந்த கொடிகளை போலீசார் அறுத்திருக்கிறார்கள். அது தொடர்பாக ஒரு காணொளி வெளிவந்தது. போலீசார் வணங்கிக் கொண்டிருக்கும் மக்களின் மத்தியில் இறங்கி கொடிகளை அறுக்கிறார்கள். ஆனால் மக்களோ அதனால் சலனப்படாமல் அமைதியாக காணப்படுகிறார்கள். அங்கு கஜேந்திரன், சாணக்கியன் ஆகிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிற்கிறார்கள். போலீசார் அவர்களைப் பொருட் படுத்தவில்லை, மதிக்கவும் இல்லை. வணங்கிக் கொண்டிருந்த மக்களின் கண்ணீரை, துக்கத்தை மதிக்கவும் இல்லை.
நிலைமாறு கால நீதியின் கீழ் நினைவு கூர்வதற்கான தமது கூட்டு உரிமையை தமிழ் மக்கள் பிரயோகிக்க முடியவில்லை என்பதனை அக்காணொளி காட்டும். நிலைமாறு கால நீதியும் உள்நாட்டுச் சட்டமும் ஒன்றுக்கொன்று எதிராகக் காணப்படும் உள்நாடு நடைமுறையை அது நிரூபிக்கின்றது. ஆனால் சனங்களைப் போலீசார் பயமுறுத்திய போதிலும், தரவையிலும் மாவடி முன்மாரியிலும் மக்கள் அமைதியாக வணக்கத்தைச் செலுத்தியிருக்கிறார்கள். அதுதான் மக்கள் மயப்பட்ட நினைவு கூர்தல்.
தமது மத நம்பிக்கைகளின் அடிப்படையிலும், பண்பாட்டு ரீதியாகவும் புனித நாட்களை,விரத நாட்களை அனுஷ்டிப்பதுபோல,மக்கள் தன்னியல்பாக,யாருடைய கட்டளைக்கும் காத்திருக்காமல்,யாருடைய அறிவிப்புக்கும் காத்திருக்காமல்,தாமாகச் சுடர்களை ஏற்றி வணங்கியிருகிறார்கள்.
இம்முறை மாவீரர் நாள் கடந்த ஆண்டை விட அதிகரித்த அளவிலும் பரவலாகவும் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கில் பிரசன்னமாகியிருந்தார்கள். கஞ்சிக் குடியாறு துயிலுமில்லத்தை நோக்கிச் சென்ற கஜேந்திரக்குமாரை போலீசார் போகவிடாமல் தடுத்திருக்கிறார்கள்.
அதே சமயம் வடக்கில் பெரும்பாலான நீதிமன்றங்கள் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படுவதை தடுக்கவில்லை. எனினும் போலீசார் ஆங்காங்கே இடைஞ்சல்களை ஏற்படுத்தினார்கள். அதிகரித்த தொகையில் மக்கள் திரண்டது கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில்தான். மன்னாரில் ஆட்காட்டிவெளி துயிலுமில்லத்தில் ஒப்பீட்டளவில் அதிக தொகை கிறிஸ்தவ மத குருக்கள் கலந்து கொண்டார்கள்.அதே சமயம் நல்லூரில் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக உருவாக்கப்பட்டிருந்த தற்காலிக நினைவிடத்தில், குறுகிய நேரத்துக்குள் அதிகரித்த மக்கள் திரண்டிருந்தார்கள். அரசடி வீதிப் பக்கம் வாகனங்கள் நகர முடியாத அளவுக்கு சனை நெரிசலாகக் காணப்பட்டது. இத்தனைக்கும் அது ஒரு துயிலுமில்லமே அல்ல.
தாயகத்தில் இளம் வயதினர் அதிகரித்த தொகையில் வணக்க நிகழ்வுகளில் காணப்பட்டார்கள்.துயிலுமல்லப் பின்னணியில் செல்ஃபி எடுத்துக்கொண்டவர்களும் உண்டு. துயிலுமில்லங்களில் வணக்கச் சுடர்களோடு இணைந்து செல்ஃபி ஒளித் துணுக்குகளும் மினுங்கின. ஒரு இளைய தலைமுறை ஏதோ ஒரு ஆர்வத்தோடு அங்கே வருகிறது.அதை அரசியல் மயப்படுத்த வேண்டியது கட்சிகளின் செயற்பாட்டாளர்களும் பொறுப்பு.
இவ்வாறாக போலீசாரின் கெடுபிடி அதிகமாக இருந்த போதிலும்,குறிப்பாகக் கிழக்கில் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்ட போதிலும், மக்கள் அதிகரித்த அளவில், பரவலாகத் ,துயிலுமில்லங்களை நோக்கிக் குவிந்தார்கள்.
பொதுவாக ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலங்களில் நினைவு கூரும் வெளி ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும். ஆனால் இப்பொழுதிருக்கும் ஆட்சி இரண்டு முகங்களைக் கொண்டது. முதலாவது முகம் ஜனாதிபதியின் லிபரல் முகமூடி அணிந்த முகம். இரண்டாவது முகம் அந்த ஜனாதிபதியை தாங்கிப் பிடிக்கும் ராஜபக்சக்களின் முகம்.லிபரல் முகமூடி அணிந்த ஜனாதிபதி, நிலைமாறு கால நீதியின் கீழ் நினைவு நாட்களை உத்தியோகபூர்வமாக தடுக்க முடியாதவராக இருக்கிறார். அதேசமயம் தாமரை மொட்டுக் கட்சியின் கைதியாக இருக்கும் அவர், அதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டியவராகவும் காணப்படுகிறார்.அரசாங்கத்தின் இந்த இரட்டை நிலைப்பாடு இம்முறை மாவீரர் நாளில் வெளிப்பட்டது.
ஆனால் தடைகள் கூடக்கூட மக்கள் அதிகரித்த அளவில் வருவார்கள் என்பதைத்தான் கடந்த திங்கட்கிழமை நிரூபித்துள்ளதா?
கடந்த திங்கட்கிழமை, மாவீரர் நாளிலன்று,யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் ஆசிரியரை பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு அதன் கிரிலப்பன தலைமையகத்துக்கு விசாரணைக்கு அழைத்திருந்தது.மூன்று ஆண்டுகளுக்கு முன் அதாவது, 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி உதயன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட இரண்டு செய்திக் குறிப்புகளுக்காக அந்த விசாரணை. அதில் ஒரு செய்திக் குறிப்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவருடைய பிறந்தநாளைப் பற்றியது. அதில் அவருடைய படமும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது, அடுத்த நாள் வரும் மாவீரர் நாள் பற்றியது.
அப்படிப்பட்ட செய்திகளைப் பிராசுரிப்பதன் மூலம், ஊடகங்கள்,தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துகின்றனவா என்ற பொருள்பட அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மாவீரர் நாள் போன்ற நினைவு நாட்களை மக்கள் மயப்படுத்துவதில் போலிசாருக்கும் மறைமுகமாகப் பங்கு உண்டு என்பதையே கடந்து திங்கட்கிழமை நிரூபித்தது. போலீசாரின் கெடுபிடி அதிகரிக்க அதிகரிக்க துயிலுமில்லங்களை நோக்கி வரும் மக்களின் தொகையும் அதிகமாகியதை எப்படி விளங்கிக் கொள்வது?