தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமைகளை மறுப்பதும் தமிழ் மக்களுக்கு எதிராக காட்டுச் சட்டங்களை பயன்படுத்துவதும் நிறுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமைகளை மறுப்பதும் தமிழ் மக்களுக்கு எதிராக காட்டுச் சட்டங்களை பயன்படுத்துவதும் தமிழர்கள் மீது ஈவிரக்கம் இல்லாத தாக்குதல்கள் சித்திரவதைகளை நடத்துவதும் காவல்துறையின் வழமையான நடவடிக்கையாக இருக்கின்றது.
ஆகவே காவல்துறையினரின் இவ்வாறான செயற்பாடுகளை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்.
யுத்த காலத்திலேயே இனப் படுகொலையோடு சேர்ந்து செயல்பட்ட பங்காளர்களான காவல்துறையினர் வடகிழக்கிலே பல உயர் பதவிகளில் இருக்கின்றனர்.
அவர்களுக்கு கீழே செயல்படுகின்றவர்களும் புதிதாக சேர்ந்து கொள்பவர்களும் அது தமிழர்களாக இருந்தாலும் கூட அவர்களுடைய மேலதிகாரிகளின் மனநிலைக்கு உள்வாங்கப்பட்டு சாதாரண தமிழ் மக்களை மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்கின்ற வக்கிர மனம் கொண்டவர்களாக மாற்றப்படுகிறார்கள்.
ஆகவே இந்த முறைமை முற்றாக மாற்றப்பட வேண்டுமாக இருந்தால் எங்கள் மீது நடைபெற்ற இனப்படுகொலைக்கு முழுமையான சர்வதேச விசாரணையொன்று நடைபெற வேண்டும்.
இராணுவத்தினர் மட்டுமல்ல இந்த இனப்படுகொலையோடு தொடர்பட்ட காவல்துறையினரும் தண்டிக்கப்படுகின்ற பொழுதுதான் காவல்துறையினர் மனிதர்களை நேசிக்கின்ற ஒரு சூழல் உருவாகும்” என அவர் மேலும் தெரிவித்தார்.