புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குள் வைத்து வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், கோயிலின் பாதுகாப்பு ஊழியர்களால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட வரிசையில் தம்மை வெகு நேரமாகக் காக்க வைத்தமை தொடர்பாக பக்தர்கள், பாதுகாப்பு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோதே இரு தரப்பினருக்கு இடை மோதல் வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கோயிலுக்குள் இரத்தம் வடிந்த நிலையில் ஐயப்ப பக்தர் அமர்ந்திருக்கும் வீடியோவொன்றை, பக்தர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நிலையில் குறித்த விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத ஒரு அரசாங்கம், இந்துக் கோயில்களில் இருக்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. கோயிலின் புனிதத்தை கெடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிராக தமிழக பாஜகவின் திருச்சி மாவட்ட பிரிவு சார்பில் இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலுக்கு வெளியே போராட்டம் நடத்தப்படும்”இவ்வாறு கூறியுள்ளார்.