திம்புக் கோட்பாடுகளைப் புறமொதுக்கும் யுக்தி அரசியலை முன்னெடுக்க விழையும், இமயமலைப் பிரகடனத்தின் கபட நோக்கங்களையும், திரிபுகளையும் முற்றாக நிராகரிப்பதாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த 69 சிவில் அமைப்புக்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் கையொப்பமிட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உலகத் தமிழர் பேரவை – சிறப்பான இலங்கையை நோக்கிய சங்க ஒன்றியம் ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்ட ‘இமயமலைப் பிரகடனம்’ வெளிப்படுத்தும் ஒன்று, இரண்டு, மூன்று நான்கு எனும் கூற்றுக்கள், மேற்குறிப்பிட்டவற்றை முற்றிலும் புறமொதுக்கி, இப் பிரச்சினையைப் புரிந்துணர்வின்மைப் பிரச்சனையாகவும் தனிமனித-குழு அடிப்படையிலான மனித உரிமைப் பிரச்சனையாகவும் கோட்பாட்டுச் சிதைப்பினை மேற்கொள்கின்றன.
இப்பிரச்சனையை அற நீக்கமும், அரசியல் நீக்கமும் செய்ய விளைகின்றன. சிங்கள பௌத்த மேலாதிக்கக் கருத்தியலின் சகிப்பு எல்லைகளுக்குள் குறுக்க முயல்கின்றன.
இப்பிரகடனத்தின் ஐந்தாவது கூற்று, சிங்கள-பௌத்த கருத்தியலின் நிறைவேற்று எந்திரமாகிய அரசையும் அதன் வன்முறைக் கருவிகளான முப்படைகளையும் பொறுப்புக்கூறலில் இருந்து விடுவித்து, அரச கட்டமைப்புக்கு வெளியில் உள்ள சில பௌத்த துறவிகள், அமைப்புகள் என்பவற்றை மட்டும் அதனுடன் பிணைக்கிறது.
இது மிகவும் பாரதூரமான ஒரு அரசியல் சதியாகும்.
கூட்டாக கையெழுத்திடப்பட்ட இமயமலைப் பிரகடனத்திற்குப் பின்னதாக வெளியிடப்பட்ட உலகத் தமிழர் பேரவை சிறப்பான இலங்கையை நோக்கிய சங்க ஒன்றியத்தினரின் கூட்டறிக்கை, உலகத் தமிழர் பேரவையின் குரலாக மட்டுமே வெளிப்படுகிறது.
சிங்கள பௌத்த மேலாண்மைக் கருத்தியலாலும் அதன் அரசியல் திட்டங்களாலும் இதுவரை விளைந்த பேரழிவுகள் குறித்த ஏற்றுக் கொள்ளுகையோ, சிறுவருத்தமோ கூட்டு அறிக்கையில் சிறப்பான இலங்கையை நோக்கிய சங்க ஒன்றியத்தின் குரலாக வெளிப்படுத்தப்படவில்லை.
தாயகத்தில் வாழும் மக்களின் சார்பில் பேசுவதற்கும் ஒப்பந்தங்களையும் பிரகடனங்களையும் மேற்கொள்வதற்கும் தாயகத்தில் அவர்களால் அமைக்கப்படும் பரந்த ‘கூட்டு முன்னணி’ ஒன்றிற்கே தார்மீக உரிமை உள்ளது என்பதை மிகவும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.