வவுனியாவில் 479 குளங்கள் வான் பாய்வதுடன் இதுவரை 64 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களிற்கான நீர் வரத்து அதிகரித்தமையினால், பெரும்பாலான குளங்கள் வான் பாய்கின்றது.
குறிப்பாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள 620 குளங்களில் 456 குளங்களும், மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் 17 குளங்களும், மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் 06 குளங்களும் வான் பாய்கின்றதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை பாலிக்குளம், சின்னசிப்பிகுளம், தேகக்கம்குளம், பிரமநாலங்குளம், பரயநாலங்குளம் உட்பட 64 குளங்கள் உடைப்பெடுத்த நிலையில் கமநல அபிவிருத்தி திணைக்களம், இராணுவம், கிராமமக்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் இணைந்து குளங்களை மறுசீரமைத்தமையும் குறிப்பிடத்தக்கது.