இமாலயப் பிரகடனத்தை செய்த உலகத் தமிழர் பேரவையானது,அது தொடர்பாக விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.அந்த அறிக்கையில் பின்வரும் தகவல்கள் காணப்படுகின்றன….
பிரகடனக்குழு மல்வத்த பீடாதிபதியை சந்தித்தபோது அவர் பின்வருமாறு கூறியுள்ளார்…“கடந்த காலங்களில் கட்சிகளுக்கிடையில் உருவாக்கப்பட்ட பல்வேறு உடன்படிக்கைகள் இல்லாமல் போவதற்கு வீதிக்கு இறங்கிய பௌத்த பிக்குகள்தான் காரணமென்று தமிழ் பிரதிநிதிகள் கூறியது உண்மைதான் (இந்தச் சந்திப்பின் ஒவ்வொரு கூட்டத்திலும் GTF பிரதிநிதிகள் பலதைக் குறிப்பிட்டிருந்தனர். “பண்டா – செல்வா ஒப்பந்தம்”, “டட்லி – செல்வா ஒப்பந்தம்”, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடனான “போர்நிறுத்த ஒப்பந்தம்” மற்றும் அரசியலமைப்பின் “13 வது திருத்தம்” உட்படக் கடந்த காலத்தின் பல தலைவர்களுக்கிடையிலான ஒப்பந்தங்கள்). இனவாதத்தையும் வெறுப்பையும் போதிக்கும் இந்தப் பிக்குகளில் ஒரு சிறுபான்மையினர் உரத்த குரலில் இவற்றைப் பேசி வெற்றி பெற்றனர்.ஏனென்றால் சமாதானத்தையும் சமத்துவத்தையும் விரும்பும் நம்மில் பெரும்பான்மையானவர்கள் அந்தச் சந்தர்ப்பங்களில் போதுமான அளவு உரத்த குரலில் பேசவில்லை. எதிர்காலத்தில் நாம் அதைச் செய்ய வேண்டும்.”
பிரகடனக் குழு அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்தபோது அவர் பின்வருமாறு கூறியுள்ளார்……”சகோதரத்துவம்,சமத்துவம் மற்றும் சமாதானத்தை அடிப்படையாகக் கொண்ட இலங்கையை நாம் கட்டியெழுப்பிய அன்றைய நாளே இலங்கை என்ற நாடு உண்மையான வெற்றியைக் கொண்டதாக அமையும்”……..”எந்த மதத்தைச் சேர்ந்த மக்களையும் சமமாக உணரவைக்கும் போதுதான், வளமான மற்றும் வெற்றிகரமான இலங்கையை உருவாக்கியதாக எங்களால் கூற முடியும்”. மக்களிடம் செல்லும் மகத்துவமான பணியை நீங்கள் முன்னெடுத்துள்ளீர்கள். உங்களுக்கு என் வாழ்த்துகள்”.
பிரகடனக் குழு அமரபுர மகாநாயக்கரை சந்தித்தபோது அவர் பின்வருமாறு கூறியுள்ளார்……“தனியாகச் செல்வதற்கு அன்பு, ஞானம்,பொதுஅறிவு, கடினமாக உழைக்க வேண்டிய தேவை அவசியமில்லை. தனித்தனி வழிகளில் செல்வது எளிது. இருப்பினும், ஒன்றிணைவதற்கு, அன்பு, பொது அறிவு, ஞானம் ஆகியவற்றைக் கைக்கொண்டு நாம் கடினமாக உழைக்க வேண்டும். மக்களை ஒன்றிணைக்கும் மகத்தான வேலைத்திட்டம் ஒன்றினை நீங்கள் தொடங்குகிறீர்கள்.இது எளிதாக இருக்காது.இதற்குக் கடின உழைப்புத் தேவைப்படும். உங்கள் வழியில் பல தடைகள் வரும்.உறுதியையும், பொறுமையையும்,சகிப்புத்தன்மையையும் நீங்கள் கைக்கொள்ளுங்கள். ஈற்றில் நீங்கள் வெற்றியடைவீர்கள்.உங்களுக்காக நாங்கள் பிரார்த்திக்கின்றோம்.”
பிரகடனக் குழு ராமான நிக்காய மகாநாயக்கரைச் சந்தித்தபோது அவர் பின்வருமாறு கூறியுள்ளார்…”நாம் அனைவருக்கும் சமமான இலங்கையை உருவாக்கும் போதுதான் நாட்டின் எந்தப் பகுதியிலும் பாதுகாப்பாக வாழ்வதை மக்கள் அனைவரும் உணரமுடியும்.இந்த மகத்தான முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் உங்கள் அனைவரையும் நான் ஆசீர்வதிக்கிறேன்”
மேற்கண்ட நான்கு மகாநாயக்கர்களும் கூறியவற்றை தொகுத்து பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது.அவர்கள் பிரகடனத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள் அல்லது பிரகடனத்தை எடுத்த எடுப்பில் எதிர்க்கவில்லை.
இலங்கைத் தீவின் மத அரசியல் வரலாற்றைத் தொகுத்துப் பார்த்தால் இது ஒரு முன்னேற்றம்.ஏனென்றால் கடந்த பல தசாப்த காலங்களில் சிங்களம் தலைவர்களுக்கும் தமிழ் தலைவர்களுக்கும் இடையே எட்டப்பட்ட எல்லா உடன்படிக்கைகளுக்கும் பௌத்தப்பிக்குகள் எதிராக காணப்பட்டிருக்கிறார்கள்.பல சமயங்களில் பௌத்தப்பிக்குகளே நேரடியாக எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியிருந்திருக்கிறார்கள்.அண்மை மாதங்களாக, குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னிருந்து, சிங்கள பௌத்தமயமாக்கல், நிலப்பறிப்பு போன்ற நடவடிக்கைகளில் பௌத்தப்பிக்குகள்தான் முன்னணியில் நிற்கின்றார்கள். இப்படிப்பட்டதோர் பின்னணியில்,சக்திமிக்க மகாநாயக்கர்கள் மேற்கண்டவாறு தெரிவித்திருப்பது நிச்சயமாக ஒரு முன்னேற்றம்தான்.இமாலய பிரகடனம் அவர்களுக்குத் தேவையாக இருக்கின்றது.ஆனால் அதற்கொரு அரசியல் வியாக்கியானம் உண்டு
இலங்கைத் தீவின் மகா சங்கம் எனப்படுவது அரசியலைத் தீர்மானிக்கும் நான்கு சக்திகளில் ஒன்று. முதலாவதாக நாடாளுமன்றம். இரண்டாவதாக படைத்தரப்பு. மூன்றாவதாக நீதி நிர்வாகக் கட்டமைப்பு. நான்காவதாக மகா சங்கம்.இந்த நான்கும்தான் இலங்கைத்தீவின் சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பை கட்டியெழுப்பும் நான்கு தூண்கள் ஆகும்.எனவே இந்த நான்கு தூண்களுக்கும் இடையே நலன்சார் உறவு உண்டு.ஒன்று மற்றதைப் பாதுகாக்கும் விதத்தில் முடிவுகள் எடுக்கப்படும்.
இந்த அடிப்படையில் பார்த்தால்,இலங்கைத் தீவின் அரசுக் கட்டமைப்பை, குறிப்பாக படைக்கட்டமைப்பை காப்பாற்ற வேண்டிய ஒரு தேவை மகா சங்கத்துக்கு ஏற்பட்டிருக்கின்றது.ஏனென்றால் அண்மை ஆண்டுகளில் இலங்கைத் தீவின் படைப்பிரதானிகள் சிலருக்கு எதிராக மேற்கு நாடுகள் தடை விதித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா இலங்கைத் தீவின் படைத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராகப் பயணத் தடை விதித்து விட்டது. கனடா மூத்த ராஜபக்சக்கள் இருவரும் உட்பட எனைய சில படை அதிகாரிகளுக்கு எதிராக தடை விதித்து விட்டது. மற்றொரு முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிராக அமெரிக்கா கடந்த ஆண்டில் தடை விதித்தது.சில படைத்தளபதிகள் வெளிநாடுகளில் வசிக்கும் தமது பிள்ளைகளை அல்லது வெளிநாடுகளில் கல்வி கற்கும் தமது பிள்ளைகளை சென்று பார்க்க முடியாத ஒரு நிலைமை காணப்படுவதாக,வியத்மக அமைப்பின் காணொளி ஒன்றில் கேட்டதாக ஒரு ஞாபகம். ஐரோப்பிய நாடுகள் சிலவும் அவ்வாறு சில படைத்தளபதிகளுக்கு விசா வழங்க மறுப்பதாகத் தகவல்.
மிகக்குறிப்பாக அண்மையில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின்போது பேரவையின் துணை ஆணையாளர் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார்.மேலும் 10 படை பிரதானிகளின் பெயர்களை அடையாளம் கண்டிருப்பதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐநாவின் 46/1 தீர்மானத்தின் பிரகாரம் இலங்கைத் தீவில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பான சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஓர் அலுவலகம் ஐநா மனித உரிமைகள் ஆணையருடைய அலுவலகத்தில் பல மாதங்களாக இயங்கி வருகின்றது. இதில் சேகரிக்கப்படும் தகவல்கள் என்றைக்கோ ஒரு நாள் இலங்கை அரச படைகளுக்கு எதிராகப் பயன்படுத்தத் தக்கவை.
இவ்வாறு தமது யுத்த வெற்றி நாயகர்கள் மேற்கத்திய நாடுகளில் குற்றவாளிகளாகக் காணப்படும் ஒரு நிலைமை குறித்து மகாசங்கம் உஷாரடைந்து விட்டது. அந்த நிலைமையைத் தணிப்பதாக இருந்தால் மேற்கு நாடுகளோடு அவர்கள் ஏதோ ஒரு சமரசத்திற்குப் போகவேண்டும்.அந்த அடிப்படையில்தான் மேற்கைத் தளமாகக் கொண்ட ஒரு புலம் பெயர்ந்த தமிழர் அமைப்பு முன்னெடுத்த ஒர் இணக்க முயற்சியில் மகாசங்கம் ஈடுபாடு காட்டியிருக்கிறது.
இந்த விடயத்தில் உலகத் தமிழர் பேரவை கூறிய ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் அதிகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் என்பது சிங்கள மக்கள் மத்தியில் பரவலாக காணப்படும் ஒரு கருத்து. அதேபோல பௌத்த மகா சங்கம் தீர்வுக்குத் தடை என்பது இலங்கைத் தீவின் பல ஆண்டுகால யதார்த்தம். எனவே இனப்பிரச்சினையில் துருவநிலைப்பட்டிருக்கும் இந்த இரண்டு தரப்புகளுக்கும் இடையில் ஓர் இணக்கத்தை கொண்டு வருவதே தமது அடிப்படை நோக்கம் என்று உலகத்தமிழர் பேரவையின் அறிக்கை கூறுகிறது. அதில் உண்மைகள் உண்டு.ஆனால்,அகுதற்குரிய மக்கள் ஆணையை உலகத் தமிழர் பேரவை எங்கிருந்து பெற்றது?
2009க்கு முன்னரும் சரி,பின்னரும் சரி தமிழ் மக்களின் அரசியலைப் பொறுத்தவரை புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு என்பது மிகப்பெரியது. ஈழப் போரின் காசு காய்க்கும் மரங்களாக அவர்களே காணப்பட்டார்கள்.அதேபோல 2009க்கு பின்னர் அனைத்துலக அரங்கில் நீதி கேட்டுப் போராடும் எல்லாக் களங்களிலும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பங்களிப்பு பெரியது.இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியைக் கோரும் எல்லாப் போராட்டங்களிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தான் ஈட்டியின் கூர் முனை போல காணப்படுகின்றார்கள். தமிழர்கள் புலம்பெயர்ந்து வாடும் நாடுகளில் அதிக தொகையானவர்கள் வாழும் நாடு கனடா.அந்நாடு இனப்படுகொலைக்கு எதிராகவும் போர்க் குற்றங்களுக்கு எதிராகவும் அண்மை ஆண்டுகளில் தீர்மானகரமான சில நகர்வுகளை முன்னெடுத்திருக்கின்றது. இவை இலங்கைத்தீவின் அரசுக் கட்டமைப்புக்கு அச்சுறுத்தலானவை. இப்படிப்பட்டதோர் பின்னணியில்,ஒரு புலம்பெயர்ந்த தமிழர் அமைப்பின் முயற்சிகளில் ஆர்வங் காட்டுவதன்மூலம் சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கு மகாசங்கம் முயற்சிக்கிறது என்பது ஓர் அரசியல் விளக்கம்.
ஆனால் அதைவிட ஆழமான அறம் சார்ந்த,மதம் சார்ந்த, நீதிநெறி சார்ந்த சில கேள்விகளை இங்கே கேட்க வேண்டியிருக்கிறது.
புத்த பகவான் அகிம்சையை போதித்தவர். அனைத்து உலக இன்பங்களையும் துறந்து சந்நியாசம் பூண்டவர். அவரை அஹிம்சாமூர்த்தி என்று அழைப்பார்கள். அப்படிப்பட்ட அஹிம்சா மூர்த்தியின் வழிவந்த மகா சங்கங்கள் இலங்கைத் தீவில் அஹிம்சையைப் போதித்தனவா?இனங்களுக்கு இடையிலான ஹிம்சைக்கு மகா சங்கமும் பொறுப்பு கூறுமா? இலங்கைத் தீவின் மகா சங்கம் மெய்யாகவே பௌத்த சிந்தனைகளை பின்பற்றி இருந்திருந்தால், இலங்கை தீவின் சிங்கள பௌத்த அரசு தலைவர்கள் உண்மையான பௌத்தர்களாக இருந்திருந்தால், இனப் பிரச்சினை என்ற ஒன்று தோன்றியிருக்குமா? ஒரு யுத்தம் நடந்திருக்குமா?
இல்லையே. எனவே கடந்த பல தசாப்த கால இன முரண்பாட்டுக்கும் வன்முறைகளுக்கும் அனர்த்தத்துக்கும் பௌத்த மகா சங்கம் பொறுப்புக் கூற வேண்டும். அது தொடர்பில் ஒரு மத நிறுவனம் என்ற அடிப்படையில் அவர்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் முன் உதாரணத்தை காட்ட வேண்டும். கடந்த பல தசாப்த கால இலங்கைத் தீவின் அரசியலில் சிங்கள பௌத்த அரசாட்சி எனப்படுவது புத்த பகவானின் அடிப்படைப் போதனைகளுக்கு முரணாக இருந்தது என்பதனை துணிச்சலாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.சிங்களக் கூட்டுஉளவியலை சமாதானத்தை நோக்கித் தயார்படுத்துவதற்கு அது மிக அவசியம். கம்பூச்சியாவில் ஆயுத மோதல்களின் போது பௌத்தபிக்குகள் நல்லிணக்கத்தின் தூதுவர்களாக செயல்பட்டிருக்கிறார்கள்.அதேசமயம் பர்மாவில் ரோஹியங்கா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையில் பௌத்த மதகுருக்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் உண்டு.
இலங்கைத் தீவு தன்னை தேரவாத பௌத்தத்தின் மகிமைக்குரிய சேமிப்பகமாகக் கூறிக்கொள்வதுண்டு. ஆனால் இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த அரசியல் என்பது அந்த மகிமையை நிரூபிக்கும் ஒன்றாக இருக்கவில்லை. எனவே பௌத்த மகா சங்கங்கள் இறந்த காலத்துக்கு பொறுப்பு கூற வேண்டும். உலகத் தமிழர் பேரவை அதன் தனியோட்டதுக்குப் பொறுப்புக் கூற வேண்டும்