நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய தலைமைத்துவத்தை தெரிவு செய்யும் முக்கிய பொறுப்பு அடுத்த வருடம் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆகவே குடும்ப ஆட்சியை மீண்டும் தோற்றுவிக்காமல் மக்கள் தமது பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் ஊடகங்களுக்குக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
தவறான ஆட்சியாளர்களிடம் நாட்டை ஒப்படைத்ததன் காரணமாகவே அனைத்து மக்களும் அந்த பாவத்தை அனுபவிக்க வேண்டியேற்பட்டது.
அடுத்த வருடம் நிச்சயம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும். அதனைக் காலம் தாழ்த்தவோ, மாற்றவோ எவருக்கும் அதிகாரம் இல்லை.
பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய அறிவுள்ள, சர்வதேசத்துடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளக் கூடிய சிறந்த தலைவரை தெரிவு செய்ய வேண்டியது மக்களுக்கு வழங்கப்படும் பொறுப்பாகும்.
எனவே மக்கள் அறிவுடன் சிந்தித்து தீர்மானத்தை எடுக்க வேண்டும். மக்களால் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் நாம் ஏற்றுக் கொள்வோம்.
நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதைக் கூற முடியாது. அது ஜனாதிபதியின் முடிவுக்கமையவே இடம்பெறும்.
எந்த தேர்தலானாலும் நாட்டுக்கு பொருத்தமான ஆட்சியும், தலைமைத்துவமும் தெரிவு செய்யப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.