நட்பு நாடுகளிடம் இருந்து குறைந்தளவிலான ஆயுதங்களே உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டு உக்ரைனுக்கு மிக மோசமாக இருக்கும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஆண்டு மார்ச் மாதம், ஐரோப்பிய நட்பு நாடுகளிடம் இருந்து ஒரு மாதத்திற்கு 5 இலட்சம் குண்டுகளை உக்ரைன் கோரிய நிலையில் அது கிடைக்காததால் ஒரு மாதத்திற்கு வெறும் 110,000 குண்டுகளையாவது வழங்குமாறு கோரியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் ஒரு வருடத்திற்குள் ஒரு மில்லியன் குண்டுகளை உறுதியளித்த நிலையில் ஐரோப்பிய படைகளின் கையிருப்பில் இருந்து நவம்பர் இறுதிக்குள் 300,000 குண்டுகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது உக்ரைன் கோரியதில் மூன்றில் ஒரு பங்கு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவும், தான் உற்பத்தி செய்யக்கூடியதை விட அதிகமான குண்டுகளை தயாரித்துள்ள நிலையில் கடந்த செப்டம்பரில் வட கொரியாவின் உதவியையும் ரஷ்யா நாடி இருந்தது. அதன்படி ஒரு மாதத்திற்குள், வட கொரியா 1,000 கண்டெய்னர்கள் மதிப்புள்ள வெடிமருந்துகளை வழங்கியுள்ளது என வெள்ளை மாளிகை கூறியது.
இதேநேரம் கடந்த ஓகஸ்ட் முதல் வட கொரிய சுதந்திர வர்த்தக மண்டல துறைமுகத்தில் இருந்து ரஷ்யாவின் துனாய் துறைமுகத்திற்கு இடையே பல கப்பல்கள் பயணித்ததாகவும் ஆகவே ரஷ்யாவில் இராணுவ தளவாடங்கள் இருப்பு அதிகமாக இருக்கலாம் என்றும் வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.