பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,182 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுக்திய நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 44 பேர் விளக்கமறியல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருளுக்கு அடிமையான 47 சந்தேகநபர்கள் புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஏற்கனவே சந்தேக நபர்களாக பட்டியலிடப்பட்டு தேடப்பட்டு வந்த 138 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 287 கிராம் ஹெரோயின், 246 கிராம் ஐஸ் போதைப்பொருள், 5.4 கிலோ கிராம் கஞ்சா, 119 போதைப்பொருள் மாத்திரைகள் மற்றும் 19,052 கஞ்சா செடிககளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக பொதுமக்களுக்கு தகவல் வழங்குவதற்காக அவசர தொலைபேசி இலக்கமொன்றையும் பொலிஸார் அறிமுகம் செய்துள்ளனர்.
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் கீழ் இந்த அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, போதைப்பொருள் பாவனையாளர்கள் அல்லது பாதாள குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக தகவல் தெரிந்தால் 071 859 8800 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸ் தலைமையகத்தை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.