கொரோனாவின் துணை மாறுபாடான ஜே.என்.1 தொற்றை சுகாதார அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
மேலும், நாடு முழுவதிலும் மீண்டும் பரவி வரும் அம்மை நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போடும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலவச சுகாதார சேவையின் கீழ் இலங்கை மக்களுக்கு தரமான மற்றும் வினைத்திறன் கூடிய மருந்துகளை வழங்கும் முயற்சி தொடர்ந்து செயற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா நெருக்கடிக்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
எவ்வாறாயினும், நாட்டின் நிதி நிலைமையின் நிலையான முன்னேற்றத்துடன், அத்தியாவசிய மருந்துகளைப் பெறுவதற்கான கொள்முதல் செயல்முறையை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது.
மருந்துகளை கொள்முதல் செய்வதில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க, அதனை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கடந்த வருடம் சுமார் 700 பேர் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியில் சில குறைபாடுகள் இந்த நிலைக்கு பங்களித்திருக்கலாம். ஜனவரி இரண்டாவது வாரத்தில் இருந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களிலும் தட்டம்மை தடுப்பூசி தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான நோய்த்தடுப்பு மருந்துகளைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் தேவைப்பட்டால், தனிநபர்களும் இந்த தடுப்பூசியை மேலதிக மருந்தாகப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தியாவில் இருந்து பதிவாகியுள்ள புதிய ஜே.என்.1 கொரோனா திரிபு பற்றிய விவாதங்களுக்கு மத்தியில், உலக சுகாதார அமைப்பு தற்போது அறிவித்துள்ளபடி, அது தொடர்பாக கவலையடைய தேவை இல்லை.
அவை தொடர்பாக கண்காணிப்பும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆதரவுடன், விரிவான மாதிரி பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
இன்றுவரை, புதிய கொரோனா மாறுபாடு கொண்ட நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை.
இருப்பினும், கடந்த தொற்றுநோய் காலத்தில் பின்பற்றப்பட்ட சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.