திருகோணமலை நகரில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
உள்நாட்டு போர் உச்சமடைந்திருந்தவேளை இடம்பெற்றிருந்த இந்த சம்பமானது மிக மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஒன்று என உள் நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தொடர்ந்தும் பேசப்படுகின்றது.
சர்வதேச மன்னிப்பு சபை உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் இலங்கை அரசு மீது வன்மையான கண்டனத்தை அவ்வேளை வெளியிட்டிருந்தனர்.
திருகோணமலையிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவர்களான இவர்கள், பாடசாலை கல்வியை முடித்த பின்னர் பல்கலைக்கழக உயர் கல்விக்கான அனுமதியை எதிர்பர்த்திருந்தனர்.
இந்நிலையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி மாலை திருகோணமலை கடற்கரை பகுதியில் பொழுது போக்குக்காக கூடியிருந்தவேளை இந்த மாணவர்கள் ஆயுததாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டு காந்தி சிலை சுற்று வட்டத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குறித்த சம்பவம் இடம்பெற்று 18 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் அவர்களை நினைவு கோரும் முகமாக திருகோணமலை வாழ் பொது மக்களால் ஒன்றிணைந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.