எந்தத் தேர்தலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராகவே இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அவரது அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது நாடு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி திட்டங்களும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மக்கள் மீது விரும்பி வரி விதிக்கவில்லை. தற்போதைய சூழ்நிலையில் கட்டாயம் வரி செலுத்தப்பட வேண்டும்.
மீண்டும் நெருக்கடி நிலை ஏற்படாதிருக்க வேண்டுமென்றால் வரி அதிகரிப்பு கட்டாயம் அவசியம். உலக நிலைவரமும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளது.
கடுமையான முடிவுகள் எடுக்கப்பட்டதால்தான் பணவீக்கத்தை குறைக்க முடிந்தது. இன்னும் 3, 4 மாதங்களில் சில பொருட்களின் விலைகள் குறையும் என நம்புகின்றோம்.
நீர்க் கட்டணம் தொடர்பான விலை சூத்திரம் இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படும். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அந்த சூத்திரம் அமையும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.