வவுனியா மாவட்டத்தில் நெற்செய்கைகளில் வண்ணத்துப் பூச்சியை போன்ற ஒரு பூச்சி இனம் நோயைப் பரப்பி வருவதாகவும் இதன் காரணமாக தமது செய்கை பெரும் பாதிப்பை அடைந்து வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த நோயை கட்டுப்படுத்துவதற்கு பல வகையான கிருமி நாசினிகளை பயன்படுத்திய போதிலும் அவை எதுவும் பலனின்றி போயுள்ளதாக தெரிவிக்கும் விவசாயிகள் தம் கடன் பட்டு செய்த நெற் செய்கை இவ்வாறு பாதிப்புக்குள்ளாவதையிட்டு வேதனை அடைவதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் கபிலநிற தத்தி, வெண் முதுகுத் தத்தி, மடிச்சு கட்டி போன்ற நோய்கள் தனது நெற்பயிர்களை தாக்கிய நிலையில் அவற்றை ஓரளவு கட்டுப்படுத்தி வருகின்ற நிலையிலேயே இவ்வாறான வண்ணாத்திபூச்சி போன்ற புதிய பூச்சி இனம் ஒன்று தமது வயல்வெளிகளில் காணப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் பி. அற்புதச்சந்திரனிடம் கேட்டபோது, குறித்த நோயானது அந்து பூச்சி என அடையாளப்படுத்துவதாகவும் இதனை கட்டுப்படுத்துவதற்கு தமது விவசாய போதனாசிரியர் அவர்களை நாடி அது தொடர்பில் அறிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் குறித்த வயல்களையும் இன்றையதினம் அவர் பார்வையிட்டு குறித்த பூச்சி இனம் தொடர்பாக அவர் உறுதிப்படுத்தி விவசாயிகளுக்கு தெளிவூட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.