தமிழரசு கட்சியின் தலைவரைத் தீர்மானிப்பதற்கான தேர்தல் பெரும்பாலும் இம்மாத இறுதியில் நடக்கலாம் என்றே தோன்றுகிறது. அதை ஒத்தி வைப்பதற்கு சம்பந்தர் முயற்சிப்பதாக இடையில் தகவல்கள் வந்தன.ஆனால் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் இரண்டு பிரதான வேட்பாளர்களும் தீர்மானகரமாக இருப்பதாகத் தெரிகிறது.குறிப்பாக சுமந்திரன் தேர்தலை நடத்த வேண்டும் என்ற விடயத்தில் பிடிவாதமாக காணப்படுகிறார்.பல மாதங்களுக்கு முன்னரே அவர் அதை நோக்கி உழைக்கத் தொடங்கி விட்டார்.சம்பந்தருக்கு எதிராக வெளிப்படையாக ஒரு தென்னிலங்கை ஊடகத்துக்கு அவர் கருத்துத் தெரிவிக்கும் பொழுது,அந்தக் கலகம் தொடங்கிவிட்டது. அந்த கலகத்தின் விளைவாகத்தான் தமிழரசுக் கட்சி அதன் தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலை நடத்தும் ஒரு நிலைமை தோன்றியது.
இது ஒரு விதத்தில் ஜனநாயகமானது.ஒரு கட்சிக்குள் யார் தலைவர் என்பதை தீர்மானிப்பதற்கு தேர்தலை வைப்பது.தமிழரசு கட்சிக்கு 73 வயது. இந்த 73 ஆண்டுகால பகுதியிலும் அதன் தலைமையை தீர்மானிப்பதற்கு தேர்தல் நடக்கவில்லை.அதை ஒரு செழிப்பான பாரம்பரியமாக அவர்கள் சிலாகித்துக் கூறுவது உண்டு.ஆனால் அந்த பாரம்பரியம் இப்பொழுது சிதைந்து விட்டது. அதை சிதைத்தவர் முதலாவதாக சம்பந்தர்.இரண்டாவதாக மாவை. மூன்றாவதாக சுமந்திரன்.நாலாவதாக கட்சிக்குள் உள்ள எல்லா மூத்த உறுப்பினர்களும். கட்சியின் செழிப்பான ஒரு பாரம்பரியத்தை எல்லாருமாகச் சேர்ந்து சிதைத்து விட்டார்கள்.ஆனாலும் தேர்தலை வைத்து தலைவரைத் தேர்வு செய்வது என்பது அதைவிடச் செழிப்பான ஒன்றுதான்.அது ஜனநாயகமானது.
அதே சமயம்,கட்சியின் தலைவருக்கான தேர்தலில் எத்தனை பேர் வாக்களிக்க போகிறார்கள் என்ற கேள்விக்கு கட்சியின் மூத்த ஆட்களிடமே தெளிவான பதில் இல்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அண்மையில் டாண் டிவிக்கு வழங்கிய ஒரு நேர்காணலில் தென்மராட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான சயந்தன் பேசும்பொழுது,எத்தனை உறுப்பினர்கள் வாக்களிக்க போகிறார்கள் என்று கூறுவதைத் தவிர்த்தார் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.அவர் மட்டுமல்ல போட்டியில் ஈடுபடும் பிரதான வேட்பாளர்களுக்கும் கூட கட்சிக்குள் எத்தனை பேர் வாக்களிக்கப் போகிறார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை என்ற ஒர் அவதானிப்பும் உண்டு.இது கட்சிக் கட்டமைப்பு சீரழிந்து போய் இருப்பதனை; கட்சியின் யாப்பு விசுவாசமாக பின்பற்றப்படவில்லை;என்பதனைக் காட்டுகின்றது.அரசியல் விமர்சகர் ஜோதிலிங்கம் கூறுவது போல தமிழ் மக்கள் மத்தியில் கட்சிகள் இல்லை தேர்தலில் ஈடுபடும் குழுக்கள்தான் உண்டு என்பதை இது காட்டுகின்றதா?
எனினும் நடக்கவிருக்கும் தேர்தலையொட்டி எல்லாம் சீர்செய்யப்படக்கூடிய நிலைமைகள் தெரிகின்றன.அதுவும் நல்லதுதான்.தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ளதில் பெரிய கட்சி அது.அதற்குள்ளேயே இதுதான் நிலைமை என்றால்,ஏனைய கட்சிகளின் நிலைமை எவ்வாறு உள்ளது?
தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள் நிலைமை அதைவிட மோசம். அங்கேயும் குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கம்தான் பலமாக உள்ளது. அந்த மிகச் சிலரும் கூட உருகிப் பிணைந்த; பிரிக்கப்படவியலாத ஒரு கூட்டாக இல்லை என்பதைத்தான் மணிவண்ணனின் விவகாரம் உணர்த்தியது.அக்கட்சியும் ஒரு வாரிசு அரசியல் தலைமைத்துவத்தைக் கொண்ட கட்சியாகத்தான் இன்றுவரை காணப்படுகிறது.
ஏனைய கட்சிகளை எடுத்துப் பார்த்தால், விக்னேஸ்வரனின் கட்சிக்குள்ளும் நிலைமை மோசமாகத்தான் உள்ளது. கட்சிக்குள் மிகச் சிலருக்கிடையில் தான் முடிவுகள் எடுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. விக்னேஸ்வரன் என்ன முடிவை எப்பொழுது எடுப்பார் என்பதனை கட்சியின் மூத்த தலைவர்களாலேயே மதிப்பிட முடியாத ஒரு நிலைமை. கட்சி உறுப்பினர்களாக இல்லாத சிலர் விக்னேஸ்வரனின் மீது செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்று ஏற்கனவே குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அந்தக் கட்சிக்குள்ளும் முடிவுகள் ஜனநாயகமாக எடுக்கப்படுவதில்லை.விக்னேஸ்வரன் ஒரு தொழில் சார் அரசியல்வாதி அல்ல. எனவே அவரிடம் அதை எதிர்பார்க்கவும் முடியாது.
ஏனைய கட்சிகள் என்று பார்த்தால் பெரும்பாலானவை ஆயுதப் போராட்ட பாரம்பரியத்தில் வந்தவை. அவை ஏற்கனவே தங்களுக்கென்று பலமான கட்டமைப்புகளை கொண்டிருக்கின்றன. ஆனால்,எல்லலாக் கட்டமைப்புகளும் இருந்தாலும் சிலர்தான் திரும்பத் திரும்ப தலைவர்களாக மேல் எழுதுகிறார்கள். ஈ.பி.ஆர்.எல்.எஃப்.இற்குள் சுரேஷ் பிரேமச்சந்திரன் தான் தொடர்ச்சியாகத் தலைவராகக் காணப்படுகிறார். டெலோ இயக்கத்தில் செல்வமும்,புளட் இயக்கத்தில் சித்தார்த்தனும் கேள்விக்கடமற்ற தலைவர்களாகக் காணப்படுகின்றார்கள்.எனவே அந்த கட்சிகளுக்குள்ளும் ஜனநாயகச் சூழல் செழிப்பாக உள்ளது என்று கூற முடியாது.
இப்பொழுது கூட்டிக்கழித்துப் பார்த்தால் தமிழ் தேசியப் பரப்பில் உள்ள பெரும்பாலான கட்சிகளுக்குள் உட்கட்சி ஜனநாயகம் மிகப் பலவீனமாகவே காணப்படுகின்றது.தமிழ் மிதவாதிகளும் ஆயுதப் போராட்டத்தை விமர்சிப்பவர்களும் ஆயுத போராட்டத்துக்குள் உட்கட்சி ஜனநாயகம் இருக்கவில்லை என்பதனை ஒரு பெரிய குற்றச்சாட்டாக முன்வைப்பதுண்டு. ஆனால் தமிழ் மிதவாதக் கட்சிகளுக்குள்ளும் அது இருக்கவில்லை என்பதுதான் வரலாற்று உண்மை. அது ஒரு தமிழ் வியாதி.தமிழ் பரம்பரை வியாதி. இனப்படுகொலைக்கு பின்னரும் குணமாக்கப்படாத ஒரு வியாதி.
தமிழரசுக் கட்சிக்குள் நடக்கவிருக்கும் தேர்தல் அதில் ஏதும் உடைப்பை ஏற்படுத்துமா?
ஒரு கட்சி என்று வரும் பொழுது அதற்குள் பல்வேறு வகைப்பட்ட நம்பிக்கைகளை கொண்டவர்கள் காணப்படுவார்கள்.கட்சிகளுக்குள் மட்டுமல்ல தேசிய இயக்கங்கள் எல்லாவற்றுக்கும் அது உண்டு.ஒரு தேசிய இயக்கம் அல்லது தேசியப் பெருங்கட்சி எனப்படுவது, அது பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் கூட்டத்தின் பலங்களையும் பலவீனங்களையும்தான் பிரதிநிதித்துவப்படுத்தும்.அந்த அடிப்படையில் எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்களிடம் என்ன இருக்கின்றதோ அதைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
இந்திய இலங்கை உடன்படிக்கை எழுதப்பட்ட காலத்தில், யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஒரு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டது.அதில் பேசிய மு.திருநாவுக்கரசு ஒரு முக்கிய விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.தமிழ் அரசியலில் செழிப்பான ஒரு ஜனநாயகப் பாரம்பரியம் இருந்ததில்லை என்பதே அது.ஈழத் தமிழர்களின் நவீன வரலாற்றில் ஜனநாயகப் பாரம்பரியத்தைக் கட்டி எழுப்பத் தேவையான நூல்கள் ஆய்வுகள் பெருமளவுக்கு வெளிவந்திருக்கவில்லை என்றும் அவர் அந்த உரையில் குறிப்பிட்டிருந்தார்.தமிழ் அரசியலில் மட்டுமல்ல,தமிழ் மக்களின் அன்றாட வாழ்விலும் அதுதான் நிலைமை.தமிழ் வீடுகளில்,பாடசாலைகளில், அலுவலகங்களில்,கோவில்களில்,சனசமூக நிலையங்களில், பெரும்பாலானவற்றில் அக ஜனநாயகம் இருக்கவில்லை.சமூகத்துக்குள் இருக்கும் ஒன்றைத்தான் கட்சிகளும் இயக்கங்களும் பிரதிபலிக்கும்.
தமிழ்க் கட்சிகள் மத்தியில் அகஜனநாயகம் செழிப்பாக இருக்கவில்லை. இருந்திருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதைந்திருக்காது.கூட்டமைப்பு எனப்படுவது தமிழ் அரசியலில் தோன்றிய ஒரு திருப்பகரமான கூட்டு ஆகும்.ஆயுதப் போராட்ட இயக்கம் ஒன்று தான் ஆயுத ரீதியாக தோற்கடித்த அல்லது அரங்கில் இருந்து அகற்றிய இயக்கங்களையும் கட்சிகளையும் மீண்டும் அரவணைத்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பு அது.அதற்குள் ஒரு பண்புருமாற்ற அரசியல் உண்டு. அந்த பண்புருமாற்ற அரசியல் காரணமாகவும்,ஆயுதப் போராட்டத்தில் பின்னணியில் நடந்த ஒரு தேர்தல் என்ற அடிப்படையிலும் நவீன தமிழரசியலில் அதிகளவு ஆசனங்களை கூட்டமைப்பு பெற்றது.
இவ்வாறு நவீன ஈழத் தமிழ் அரசியலில் தோன்றிய பண்புரு மாற்றத்தின் குறியீடாக காணப்பட்ட ஒரு கட்டமைப்புச் சிதைத்தமைக்கு சம்பந்தர்தான் முழுப் பொறுப்பு.ஏனெனில் அவருடைய தலைமைப் பொறுப்பின் கீழ்தான் கட்சி சிதைந்தது.இப்பொழுது தனது தேர்தல் தொகுதியில் கிளைக் குழுக்களுக்கு தான் நியமித்த ஆட்களை கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறும் ஒரு பரிதாபகரமான நிலைக்கு அவர் தாழ்ந்து விட்டார். ஒரு பெருந்தலைவர்,முது தலைவர் குறிப்பாக கிழக்கில் இருந்து வந்த ஒரு தலைவர், அவருக்குத் தரப்பட்ட கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால தலைமைத்துவ காலத்தை எங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறார் ? இப்பொழுதும் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அவர் கையாளும் உத்திகள் வேலை செய்யவில்லை என்றே தெரிகிறது.கட்சியின் மீது அவருடைய பிடி பெருமளவுக்கு தளர்ந்து போய்விட்டது.
தேர்தல் நடக்குமாக இருந்தால், அதற்குரிய கூட்டம் திருமலையில் நடக்கும்.திருமலை நகர சபை மண்டபத்தில் அது நடக்கும்.அதற்குரிய நிதி வசதிகளை புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகளிடமிருந்து கட்சி பெற்றதாக ஒரு தகவல்.அதாவது கட்சியின் பிரதான கூட்டங்களை நடத்துவதற்குக்கூட கட்சியிடம் சேமிப்பில் பணம் இல்லையா?
வரும் பத்தாம் திகதி கட்சியின் அரசியற் குழு சம்பந்தரின் வீட்டில் கூடுகின்றது. அதில் தேர்தல் பற்றி இறுதி முடிவெடுக்கப்படலாம்.தேர்தல் நடந்தால்,யார் வென்றாலும் அவருக்கு சவாலாக ஓர் எதிரணி இருக்கும்.அது அவருடைய முடிவுகளை கேள்விக்கு உட்படுத்திக் கொண்டே இருக்கும்.அதுகூட உட்கட்சி ஜனநாயகத்தை வளர்க்கும். இந்தத் தலைமைப் போட்டி காரணமாக கட்சியின் உட்கட்சி ஜனநாயகம் செழிப்படையுமாக இருந்தால்,அது தமிழ் அரசியலில் வரவேற்கத்தக்க ஒரு முன்னேற்றம் தான்.