தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் உட்பட 12 திரைப்பட அமைப்புகள் இணைந்து ‘கலைஞர் 100’ என்ற பெயரில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதிக்கு நூற்றாண்டு விழாவை சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடத்தி முடித்துள்ளனர்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், திரையுலக பிரபலங்களான ரஜினிகாந், கமலஹாசன், சிவராஜ்குமார், சிவகுமார், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மாலை 4.30 மணியளவில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளோடு ஆரம்பித்த கலை விழாவில் 100 குழந்தைகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இசை நிகழ்வுகள் நடைபெற்றன.
மேலும், இடையிடையே முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த ஆவணப் படங்கள் மற்றும் கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய நாடகம் அரங்கேற்றப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பல உச்ச நட்சத்திரங்களும் முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனான தங்களது அனுபங்கள் குறித்தும் பல்வேறு நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டனர்